
பொறுப்பற்ற காணொலிகளை வெளியிடும் சனல்-4 தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
சரணடைய வரும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு, கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.
புதன்கிழமை இரவு சனல்-4 ஒளிபரப்பிய புதிய காணொலியில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர், சரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு கோத்தாபய ராஜபக்சவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும், சிறிலங்காப் படையினருக்கு உத்தரவிட்டிருந்ததாக கூறியிருந்தனர்.
இது ஒரு பொய்யான பரப்புரை என்று கூறியு்ள்ள கோத்தாபய ராஜபக்ச, புலிகள் சரணடைவது தொடர்பாக ஐ.நாவின் பிரதிநிதி நீல் புனே தகவல் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போரின் இறுதிநாட்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மதிப்பீடு செய்துள்ளதாக அவரால் எவ்வாறு கூற முடியும் என்றும் கோத்தாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் பதிவுகளின் படி 300,000 பேரே அங்கிருந்தனர். ஆனால் போரின் முடிவில 294,000 பேர் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏனையவர் புலிகள் என்றும் அவர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் சிலர் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் தப்பிவிட்டனர் என்றும் கூறியுள்ள கோத்தாபய ராஜபக்ச, சூசை, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தாம் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது சூசையின் குடும்பத்தினர் பிடிபட்டனர் என்றும், கடற்படையினர் அனைவரினதும் மரணங்களுக்கு காரணமான சூசையின் குடும்பத்தினரை தம்மால் கொன்றிருக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த காணொலியில் தோன்றும் இருவரும் சிறிலங்கா படையினர் அல்ல என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல கூறியுள்ளார்.
சனல்- தொலைக்காட்சி முன்னைய தமது காணொலிகளை நியாயப்படுத்தவே இதை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது அதிகாரிகளோ படையினரோ வெளிநாட்டு ஊடகம் எதற்கும் செவ்வியோ அல்லது குரல் பதிவையோ வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள மேஜர் ஜெனரல் மெடவெல, சனல்- 4 தொலைக்காட்சியில் தோன்றும் இருவரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர்களே அல்ல என்றும் கூறியுள்ளார்.
சிறிலங்கா படையினருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் புலம்பெயர்ந்தவர்கள் மேற்கொள்ளும் பொய்யான பரப்புரை இது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment