
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசாங்கம் அமைதி காப்பதாக இந்தியாவிலுள்ள பெண்கள் செயற்பாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிறிலங்காவில் இணக்கப்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்கின்ற கொழும்பின் குறிப்பிட்ட வாக்குறுதிகளை நம்பி இந்தியா அது தொடர்பான தனது முயற்சிகளைக் கைவிட்டுள்ளது எனவும் 'சிறிலங்காவிலுள்ள பெண்களின் இறைமை தொடர்பான இந்திய பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர் அமைப்பு' தெரிவித்துள்ளது.
"சிறிலங்கா அரசாங்கத்தின் அமைதி முயற்சிகள் மற்றும் இணக்கப்பாட்டு முயற்சிகள் தொடர்பான பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் நம்பவில்லை. இந்த அடிப்படையில் இது தொடர்பான ஒரு உடனடி நடவடிக்கையை எடுப்பதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க முன்வரவேண்டும்" எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சிறிலங்கா அரசாங்கத்தால் தனது சொந்த நாட்டு மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்தியா மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது" எனவும் இவ்வமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.
"சிறிலங்காவின் நீண்ட காலமாகத் தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்தின் விளைவாகப் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன், இந்த மக்களுக்கு நீதியானதொரு தீர்வு வழங்கப்படவதற்கான நடவடிக்கைகளையும் இந்திய அரசாங்கம் விரைந்து முன்னெடுக்க வேண்டும்" எனவும் இப்பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்டு இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட சிறிலங்கா அரசாங்கமானது தனது இராணுவத்தினர் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களை ஏற்க மறுத்துள்ளது எனவும் இந்திய பெண்கள் உரிமைகள் செயற்பாட்டு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"1983ல் சிறிலங்காவில் ஆரம்பிக்கப்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்ப் பெண்களும் அடங்குவர். சிறிலங்காவில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் உடனடியாக மீளக் குடியேற்றப்படுவதுடன், உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும்" எனவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்விடங்கள், வாழ்வாதாரங்கள் போன்றவற்றை இழந்தும் இனச்சுத்திகரிப்பிற்கு ஆளாகியுள்ள நிலையில் சிறிலங்காவின் கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி சார் திட்டங்களில் இந்திய அரசாங்கம் பங்கெடுப்பதைத் தாம் கண்டிப்பதாகவும் இப்பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
வரலாற்றாசிரியர் உமா சக்ரவர்த்தி, பேராசிரியர் லினா சென், லக்சுமி லிங்கம், றோகினி கென்ஸ்மன், சகெலி, பெண்கள் கல்வி அபிவிருத்திக் கற்கை மையத்தின் இயக்குனர் ஜோன் போன்றோர் உள்ளடங்கலாக பல பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.


No comments:
Post a Comment