
புகழ்பெற்ற கேரள கோயில்களான குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மற்றும் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக சென்னையில் இருந்து கடிதம் மூலம் மிரட்டல் வந்துள்ளது என்று கேரள போலீசார் தெரிவித்தனர்.
மிரட்டல் விடுத்தவர்கள் தாங்கள் அல்காய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் படுகொலை செய்ய உள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் குருவாயூர் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதம் கிடைத்தவுடன் குருவாயூர் அருகே உள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்துக்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று சோதனை செய்தனர். கோயிலின் உள்ளேயும், கோயிலைச் சுற்றியும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மற்றொரு கோயில் சமீபகாலமாக செய்திகளில் பரபரப்பாக வந்துகொண்டிருக்கும் பத்மநாபசுவாமி கோயிலாகும். அந்த கோயிலில் 150 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த பொக்கிஷ அறைகளில் அரிய தங்க மற்றும் வைர நகைகள் இருந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்களும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து இந்த கோயிலிலும் சோதனை நடத்தப்பட்டது.
எனினும் சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.


No comments:
Post a Comment