கொழும்பிலுள்ள பிரபலமான கணக்காய்வு நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர் ஒருவருக்கு நேர்ந்த கதி இது. கணக்காய்வு நிறுவனங்கள் பிற நிறுவனங்களின் நிதியிடல் அறிக்கைகளையும் கணக்காய்வுகளையும் மேற்கொள்கின்றன. அந்த வகையில் இந்தப் பிரபலமான நிறுவனத்துக்கு துறைமுகத்திலுள்ள ஏற்றுமதி இறக்குமதியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
அதன்பிரகாரம் துறைமுகத்துக்குள் அமைந்துள்ள அந்த நிறுவனத்துக்குச் சென்று கணக்காய்வுகளை மேற்கொள்ள பிரபல நிறுவனத்தின் சார்பாக நால்வர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இந்தத் தமிழ் இளைஞரும் ஒருவர்.
ஆர்வத்துடன் பணியாற்றக் காத்திருந்த இவருக்கு இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம் மாத்திரமே. தமிழர் என்பதற்காக துறைமுகத்துக்கு உள்ளே செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.
துறைமுகத்துக்கு உள்ளே செல்வதாயின் அனுமதி அட்டை 'பாஸ்' பெறவேண்டிய நடைமுறை உண்டு. சிங்களவர் மூவருக்கு எந்தத் தடையுமின்றி அனுமதி அட்டை கிடைத்துள்ளது. எனினும் தமிழர் என்பதால் இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதுபற்றி அந்த இளைஞர் தனது உயரதிகாரியிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் இதுதான்.
"நான் என்ன செய்வது? நமது நாட்டின் நிலை இப்படிக் காணப்படுகிறது. தமிழருக்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது என நினைக்கிறார்கள். திறமையைப் பற்றி மூன்றாம் தரப்பினர் கவலைப்படுவதில்லை. இது என்னுடைய தவறில்லை. உங்களை வேறொரு நிறுவனத்துக்கு கணக்காய்வு செய்வதற்கு நியமிக்கிறேன்".
இந்த நாட்டில் தமிழராய் பிறந்தது எமது குற்றமில்லையே. அப்படியென்றால் கடவுளைத்தான் தண்டிக்க வேண்டும் என்கிறார் பாதிக்கப்பட்டவர்.
ஜனநாயகம், சுதந்திரம், நடுநிலை என அரசியல்தலைவர்கள் எவ்வளவுதான் பேசினாலும் இவ்வாறான அடிப்படை விடயங்களைத் திருத்தாவிடின் இனத்துவேசம் எங்கோ ஒரு மூலையில் நீறு பூத்த நெருப்பாக உயிர் கொண்டிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.


No comments:
Post a Comment