திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சட்டத்தரணி சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விநாயகபுரம் தமிழரசுக் கட்சிக் கிளைச் செயலாளர் க. வாகீசன் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கருத்தரங்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, பொன். செல்வரா சா, பா. அரியநேத்திரன் மற்றும் கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், கூட்டமைப்பின் மட்டக்களப்பு நகர இணைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார், மத்திய குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.ஏ. தமிழ்தேசன் ஆகியோரும் பிரசாரக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசுக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினை நடக்கப் போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இந்த 27 சபைகளையுமோ அல்லது 25 சபைகளையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றப் போகிறது என்பதுதான்.
இது இன்னும் மோசமாக அரசாங்கத்தைப் பாதிக்கும். அதாவது அரசின் தற்போதைய நிகழ்ச்சி நிரலைப் பாதிக்கும். இப்படியான பயம் அரசுக்கு இருப்பதன் காரணமாகத்தான் எங்களது முதலாவது தேர்தல் கூட்டத்தையே இராணுவத்தினரைக் காடையராக அனுப்பிக் குழப்பினார்கள். முற்று முழுதாகச் சீருடை அணிந்த இராணுவத்தினர்தான் இப்படி அடிக்க வந்தனர்.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையிலிருந்து நாம் விலகுவோமாகவிருந்தால் அது அரசுக்கு வாய்ப்பாகிவிடும். அரசின் அடிவருடிகளுக்குச் சந்தர்ப்பமாகிவிடும்.
இதனால் தான் அரசுடனான பேச்சுவார்த்தையில் இன்னமும் நல்ல பிரதிபலன் கிடைக்காமலிருக்கின்ற போதிலும் கூட அந்த இடத்தில் இருக்க வேண்டிய தேவையுள்ளது.
ஆனாலும் காலாகாலமாக அப்படி இருக்கப் போவதுமில்லை. எனினும் இப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கப் போவதில்லையென்றும் கூறி விட முடியாது. ஏனெனில் அரசின் மீது ஏற்பட்டுள்ள அழுத்தங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
அரசியல் முதிர்ச்சி கொண்ட தலைவர்கள் எம்மிடத்திலிருக்கிறார்கள், சர்வதேச சமூகத்திலிருந் தும் உபதேசங்கள் எமக்குக் கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றன. பலவற்றை வெளிப்படையாகப் பேச முடியாவிட்டாலும் எமது மக்கள் அந்த நம்பிக்கையை எம்மிடத்தில் வைத்துள்ளனர்.
அரசு இப்படியாகத் திணறுகின்ற வேளையில் நடக்கப் போகும் 60 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 25 சபைகளை வென்று விட்டால் அரசுக்கு எப்படியிருக்கும்? அதுதான் இவ்வளவு கோபம். ஆனால் நமக்கு அரிய சந்தர்ப்பம் இதுவாகும்.
மக்கள் ஜனநாயக அந்தத் தீர்ப்பை வழங்கினால் சர்வதேச அழுத்தம் அரசின் மீது பன்மடங்கு அதிகரிக்கும். கூட்டமைப்புக்கான ஆதரவும் அதிகரிக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும்தான் பேசித் தீர்வு காண வேண்டும், அதுவும் செய்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் நல்லிணக்கமில்லை, ஒப்புரவாகுதலுமில்லை. வித்தியாசமான குற்றங்களெனச் சொல்வதெல்லாம் அரசு மீது வரும்.
எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை எவ்விதத்திலும் கை நழுவ விடாமல் மக்கள் வாக்குகளை ஒட்டுமொத்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என்றார்.


No comments:
Post a Comment