
கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிஸ் பதிவு நடவடிக்கையானது மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ள நிலையில் இந்தப் பதிவு நடவடிக்கையில் முப்படையினரும் தற்போது இணைந்து செயற்படுவதானது மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் ஏன் இந்தப் பொலிஸ் பதிவு என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ள இந்தச் சூழ் நிலையில் முப்படையினர் இணைக்கப்பட்டுள்ளதானது பல்வேறு கோணங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் பதிவுக்கென வருபவர்கள் "உங்கள் குடும்பத்தில் யாராவது புலிகள் இயக்கத்தில் இருந்துள்ளனரா? தடுப்பில் இருக்கின்றனரா?" போன்ற கேள்விகள் உட்பட சம்பந்தமில்லா கேள்விகளைக் கேட்கின்றனர் என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் கட்டளைச் சட்டத் தின் 76 ஆவது பிரிவின் கீழ் இந்தப் பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், இந்த நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதே பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை திமிலைத்தீவு, வீச்சுக் கல்முனை, வலையிறவு உட்பட பல கிராமங்களில் முப்படையினர் தகவல் திரட்டியுள்ளனர்.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பொலிஸ் பதிவு இடம் பெறுகின்றது. எனினும், அங்கு முப்படையினர் ஈடுபடுத்தப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் மட்டும் ஏன் இப்படி என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


No comments:
Post a Comment