அரசாங்கம் தனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு விசுவாசமான படைப்பலத்தை உருவாக்கும் நோக்குடன் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. ஆனால் எல்லா விசுவாசமான படைகளும் மக்கள் எழுச்சிக்கு முன்னால் சின்னா பின்னமாகிப் போனதுதான் வரலாறு. என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மையில்லாத இந்த வரவு செலவுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2012ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்த அரசாங்கம் பாதுகாப்புத் துறைக்கு 229.9 மில்லியன் ஒதுக்கிய அரசாங்கம் மீளமைப்பு வேலைகளுக்கு வெறும் 4.3 மில்லியன்களையும் மீள்குடியேற்றத்திற்கு 0.4 பில்லியனையும் ஒதுக்கியுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்கு 611 மில்லியனை ஒதுக்கியுள்ள அரசாங்கம் யுத்தத்தினால் முழுமையான அழிவுக்குட்பட்ட முல்லைத்தீவுக்கு 157 மில்லியனும், கிளிநொச்சிக்கு 149.3 மில்லியனும் ஒதுக்கியுள்ளது.
சின்னத்தீவு, வளச்சியடையாத ஒரு நாடு வரவு செலவு திட்டத்தின் 20 வீதத்தை பாதுகாப்புத் துறைக்கு செலவு செய்கிறது என்றால், அதுவும் யுத்தம் முடிந்து இரண்டரை வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் அரசு இதனைச் செய்கிறது என்றால், தன்னை பாதுகாக்க, தனது அரசைப் பாதுகாக்க விசுவாசமான படைப்பலம் தேவைப்படுகின்றது என்றுதானே அர்த்தம். என்றார்.
மேலும், அப்படியாயின் அரசுக்கு எதிராக யார் செயற்படப் போகிறார்கள்? ஐக்கிய தேசியக் கட்சியா? அது சிதறுண்டு போய்க் கிடக்கிறது. தமிழ் மக்களா? அவர்கள் ஒரு வலுவான இராணுவ ஆக்கிரமிப்புக்குள் அடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். அப்படியாயின் வேறு யார்? எனக் கேள்வி எழுப்பிய அவர்,
அரசுக்கு ஆளும் கட்சிக்குள் இருப்பவர்கள் மீதுதான் முதலாவது அச்சம். சதாம் ஹுசேனின் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கும். கடாபியின் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கும் என்ன நடந்ததோ, அது தனது குடும்பத்திற்கும், தனது ஆட்சிக்கும் நடக்கலாம் என்ற அச்சம். எனவேதான், இவ்வளவு பொருந்தொகை பணம் படையினருக்கு ஒதுக்கப்பட்டு ஒரு விசுவாசமான படைப்பலம் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஆனால் எல்லா விசுவாசமான படைகளும் மக்கள் எழுச்சிக்கு முன்னால் சின்னா பின்னமாகிப் போனதுதான் வரலாறு.
சிங்கள மக்களும் நீண்ட காலம் புலிகள் மீதான வெற்றிக் களிப்பில் சீவிக்க முடியாது. அவர்கள் பாதிக்கப்படத் தொடங்கும் போது இந்த அரசையும் வீட்டுக்கு அனுப்புவார்கள். இதுதான் உலக யதார்த்தம். எனத் தெரிவித்தார்.
ஏறத்தாழ இரண்டரை மணிநேரம் வரவு செலவுத் திட்டத்தை பற்றி உரையாற்றிய ஜனாதிபதி முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் அரசு செய்யவிருக்கும் உதவிகளை பட்டியலிட்டார். அதற்காக எத்தனை ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஆனால் யுத்தத்தில் அத்தனை சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் அப்பாவி மக்கள் பற்றி ஒரு வசனம் அவரது உரையில் இடம்பெறவில்லை.
மீள்குடியேற்றம் பற்றியோ, வாழ்வாதாரங்கள் பற்றியோ எதுவும் இல்லை. யுத்தத்தில் அவயவங்களை இழந்த மக்களுக்காக அவரது வரவு செலவு திட்டத்தில் எதுவும் இல்லை.
அழிவுக்குட்பட்ட தமிழ் மக்களை விட நாளாந்தம் கஞ்சிக்கு கையேந்தும் சிங்கள மக்களை விட முப்படையினரையும் திருப்திபடுத்த வேண்டும், பொலிஸாரை திருப்திபடுத்த வேண்டுமென்பதே அவரின் வரவு செலவுத்திட்டத்தின் மையக்கருவாக உள்ளது.
மொத்தத்தில் யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்தால் எந்தவித நன்மையும் இல்லை. முழு நாட்டையும் இராணுவமயப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த வரவு செலவு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக எதிர்த்து நிராகரிக்கிறது. என்றார் அவர்.


No comments:
Post a Comment