பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக அலுவலகம் முன்பு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் 24.11.2011 அன்று உண்ணாவிரதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த்,லஞ்சம், ஊழலை ஓழித்து அதன் மூலமாக உங்கள் துறைகளை உயர்த்த வேண்டுமே தவிர, வெறும் விலைவாசி உயர்வு மூலம் தமிழ்நாட்டு மக்களை தண்டிக்கக் கூடாது. முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துங்கள். மெட்ரோ ரயில், மோனோ ரயில் மூலம் பல லட்சம் கோடி ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்துங்கள்.
மிடாஸ் கம்பெனி மூலம் டாஸ்மாக் கடை செழிப்படைந்து கொண்டிருக்கிறதே அதை தடுத்து நிறுத்துங்கள். இதையெல்லாம் செய்யத் தவறியவர்கள் எல்லா வரிச்சுமையையும் மக்கள் மீது சுமத்தி, அவர்கள் மட்டும் வசதியாக வாழ்ந்து கொண்டு ஏழைகளை மீண்டும் மீண்டும் ஏழைகளாக்கிக்கொண்டும் பணக்காரர்களை மீண்டும் மீண்டும் பணக்காரர்களாக ஆக்கிக்கொண்டிருக்கும் நிலைமைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது.
உங்களுக்குச் சொல்கிறேன். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினவர்கள் மண்ணுக்குள்ளே போனக்கதை உங்களுக்குத் தெரியுமா? என்ற நிலையை நீங்கள் மறந்துவிடக் கூடாது. வாழ்க்கை என்பது ஒரு சக்கரம். சுற்றிக்கொண்டுதான் இருக்கும். மேலே இருப்பவர்கள் கீழே வந்துதான் ஆக வேண்டும். கீழே இருப்பவர்கள் மேலே போயிதான் ஆகணும். இன்னைக்கு உங்கள் சுத்துல மேலே இருக்கீங்க என்ற ஆணவத்தில் ஆடாதீங்க. மக்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்கள் கஷ்டத்தை உணருங்கள். அதன் மூலம் இந்தப் பிரச்சனையை தீருங்கள்.
அம்மா என்று உங்களை சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகத்திலேயே மிகவும் புனிதமான வார்த்தை அம்மா. அம்மா என்றால் என்ன. பசித்த குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். சாப்பாடு கொடுக்க வேண்டும். ஆனால் இந்த வார்த்தைக்கு எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். அவ்வளவு பெரிய வார்த்தையை உங்களுக்கு தந்ததற்காக, அந்த பட்டத்தை உங்களுக்கு கொடுத்ததற்காக மக்களுடைய கஷ்டத்தை உணருங்கள். இவ்வாறு பேசினார்.


No comments:
Post a Comment