
இலங்கை அரசாங்கமானது 2009 இல் தமிழ்ப் பிரிவினைவாதத்தை தோற்கடித்தபோது அளவுக்கு அதிகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு விடுக்கப்படும் அழைப்புகளிலிருந்தும் நழுவிச் சென்று கொண்டிருந்தாலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வின்போது இந்த விடயம் குறித்து பதிலளிக்கும் கடப்பாட்டுக்காக அழைப்பு விடுக்கப்படும் எனக் கருதப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் உள்மட்ட விசாரணையை சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா இலங்கையைக் கேட்டிருக்கின்றது. ஆனால், கொழும்பு இதனை நிராகரித்து விட்டது என்று ஐ.பி.எஸ். செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கையின் உள்விவகாரங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆராய்வது ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்று கூறியிருந்தார்.
அமெரிக்காவின் வலியுறுத்தலுக்கு கொழும்பு இணங்கினால் யுத்தம் நடத்தப்பட்ட விதம் தொடர்பாக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகிறது. அந்த விடயம் குறித்து ஆராய வேண்டிய நிலைமை எழுந்துவிடும். மறுபுறத்தில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கக்கூடுமென்ற அச்சமும் இலங்கையில் அதிகரித்துக் காணப்படுகிறது.
சர்வதேசதரத்துக்கு ஏற்றவகையில் இலங்கை இந்த விசாரணைகளை மேற்கொள்வதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரிய நூலான்ட், கடந்த ஆகஸ்ட் 09 இல் கூறியிருந்தார்.
சர்வதேச நடவடிக்கையை இலங்கையர்கள் விரும்பவில்லையெனக் கூறுகின்றனர். ஆயினும் சர்வதேச சமூகத்திடமிருந்து இந்த விடயம் குறித்து அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த வருட முற்பகுதியில் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை வெளியாகியிருந்தது. அவற்றை ஆதாரமற்றவை எனவும் பக்கச்சார்பானவை என்றும் கொழும்பு நிராகரித்திருக்கிறது. சீனாவுக்கு ஜனாதிபதி ராஜபக்ச விஜயம் மேற்கொண்ட நிலையில் அமெரிக்காவிடமிருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இது இவ்வாறிருக்க, இந்தியாவின் நிலைப்பாடு இந்த விடயத்தில் மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது. யுத்தத்தின்போது முழுமையாக கொழும்புக்கு ஆதரவளித்து வந்த இந்தியாவானது இப்போது போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை வலியுறுத்தும் தரப்புகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.
சர்வதேச விமர்சகர்கள் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், அடிப்படை விடயங்களுக்கு அரசாங்கம் தீர்வு காணும் வரை விசாரணைக்கான அழைப்புகள் மேலும் வலுப்பெறுமென அவதானிகள் கூறுகின்றனர். இந்த விடயம் இல்லாமல் போய்விடும் என நான் நினைக்கவில்லை.
சர்வதேச விசாரணைக்கான அழைப்புகள் அதிகரித்துள்ளன. அரசாங்கம் நழுவல் போக்கில் காணப்படுவதே இந்த அழைப்புகள் வலுவடைவதற்குக் காரணமாக இருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் ஜெகான் பெரேரா கூறியுள்ளார்.


No comments:
Post a Comment