இலங்கை வன்னிப் பிரதேசத்தில் போருக்குப் பிந்திய நிலைமைகள் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்கு கொழும்புக்கு வருமாறு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.
புதுடில்லியில் உள்ள இலங்கை தூதுவர் மூலம் இந்த அழைப்புக் கடிதம் நேரில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசுக்கு எதிரான போக்கை தமிழ்நாடு முதல்வர் தீவிரப்படுத்தியதை அடுத்தே, இலங்கை அரசு ஒரு இராஜதந்திர நகர்வாக இந்த அழைப்பை அனுப்பியது.
ஆனால் மகிந்த ராஜபக்சவின் அழைப்புக்கு இதுவரை தமிழ்நாடு முதல்வரிடம் இருந்து எந்தப் பதிலும் அனுப்பி வைக்கப்படவில்லை. எனினும் இந்த அழைப்புக்கான பதிலை இலங்கை அரசாங்கம் உடனடியாக எதிர்பார்க்கவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஜெயலலிதா இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், அவர் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டும் என்பதால் அதற்கு காலம் தேவைப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை ஜனாதிபதியின் அழைப்பை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை இலங்கை அரசாங்கத்துக்கு இன்னமும் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.


No comments:
Post a Comment