
இன்றைக்கு சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் மண்ணில் சாதி அடக்கு முறைகளுக்கு எதிராக, அவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினர் கிளர்ந்து எழுந்து சரியான அரசியல் தலைமையின் கீழ் போராடினார்கள்.
அப்போதும் கூட தற்போது இருக்கும் சார்புத் தன்மைபோல சாதி வெறியர்களின் பக்கம் நின்றார்கள் பொலிஸார். பொலிஸார் அவ்வாறு நின்றபடியால் அரசாங்கமும் சாதி வெறியர்களின் பக்கமே சாமரை வீசியது.
அன்றைய கவிஞர் அமரர் சுபத்திரன் பல கவிதைகளை எழுதி அப்போது அரசியல் ரீதியாக போராடிக்கொண்டிருந்த மக்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்.
அன்றைய போராட்ட காலத்தில் சங்கானைப் பிரதேசம் சாதிவெறியர்களின் அட்டகாசத்தால் அலறியது. ஆனாலும் அதற்கெதிராக சங்கானை மக்கள் வீதிக்கு வந்து நின்று போராடினார்கள்.
அன்றைய சுபத்திரன் எழுதிய கவிதை ஒன்றில் இவ்வாறு இரண்டு வரிகள்
“சங்கானை மண்ணே சரித்திரத்தில் உன் நாமம் மங்காது. மங்காது” என்றிருந்தன அந்த உற்சாகமான வரிகள். சங்கானை மண்ணின் மகத்துவத்தை பாராட்டி எழுதினார் அந்தக் கவிஞர்.
இதேபோன்று எமது கண்களுக்கு நாவாந்துறை மண் தெரிகின்றது. நாவாந்துறை மண்ணா? அல்லது கரையா? என்று பிரித்துப் பார்க்க முடியாத அந்த கிராமத்தின் மக்கள் அடக்கு முறைகளுக்கு எதிராக ஆயுதங்கள் எதுவுமின்றி போராடினார்கள். இது நடந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை.
தங்கள் மண்ணில் வந்து நின்று அராஜகம் புரிந்த கொடியவர்களை எதிர்த்து நின்றார்கள் அந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் எதுவுமில்லை. ஆனால் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் உச்சத்து உத்வேகம் தெரிந்தது..
துணிச்சலாக எதிர்ப்புக் குரல் காட்டியவர்களை கொடியவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு வந்து கடுமையாகத் தாக்கினார்கள். காயப்படுத்தினார்கள். இதனால் படுகாயம் அடைந்த நாவாந்துறை மண்ணின் மைந்தர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டார்களாம்.
நாவாந்துறையில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட நமது உறவுகள் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் 24ம், 27ம் விடுதிகள் யுத்தகால நிலைமை போன்று கடந்த சில நாட்களில் காட்சியளித்ததாகக் கூறப்படுகின்றது.
நோயாளர் பார்வை நேரத்தில் சுமார் 500 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள், தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களைப் பார்வையிடுவதற்காக கூடியிருந்தார்களாம். இதனால் மேற்படி இரண்டு நோயாளர் விடுதிகளிலும் மக்கள் நகர முடியாத அளவிற்கு சன நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதேபோல் நோயாளர்களுக்கான கட்டில்கள் போதாமல் 27ம் விடுதியில் காயமடைந்தவர்கள், விடுதியின் நடைபாதையில் தங்கவைக்கப்பட்டிருந்தார்களாம். இந்நிலைமை சிறிது காலத்திற்க்கு முன்னர் இருந்த யுத்தகால நிலைமை போன்றிருந்ததை உணரக் கூடியதாக இருந்ததாக பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதைப்பார்க்கும் போது எமக்கு அந்த நாவாந்துறை மண்ணின் மைந்தர்களைப் பாராட்ட வேண்டும் போல உள்ளது.
இராணுவக் கொடியவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை நன்கு அறிந்திருந்தும் கூட அவர்களை எதிர்த்து நின்ற அந்த மைந்தர்களை பாராட்டுவோம்.
அவர்களை இந்த பூமிக்கு அளித்த நாவாந்துறை மண்ணை வாழ்த்திடுவோம். நாவாந்துறை மண்ணே!.. நம் வீர வரலாற்றில் உன் நாமம் பதியும்!...


No comments:
Post a Comment