தீர்ப்பு எதுவாயிருந்தாலும் சரித்திரம் படைக்கும் இவ்வழக்கு சர்வதேச அரங்கிலே காந்தி தேசத்தைத் தலை குனிய வைக்குமா அல்லது நீதியை நிலைநாட்டிய நாடு எனப் போற்றிப் புகழுமா? இதற்கான விடை சோனியா காந்தி, மன்மோகன் சிங். பிரதீபா பட்டேல் என்ற மூவரின் கையில்தானே இருக்கிறது. மறுக்கப்பட்ட நீதியை மீட்டுக்கொடுக்கும் பலம் இவர்களிடமல்லவா இருக்கிறது.
நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ? எனக்கேட்கும் பேரறிவாளன் கடிதம் கண்டு மனிதாபிமானத்தை மதிக்கும் மற்றைய மாநில மக்களும், அதன் தலைவர்களும் நீதி வேண்டி நிற்கும் இவர்களின் வேண்டுதலை நிறைவு செய்ய முன்வரவேண்டும்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கிய மரண தண்டனை நீண்டகாலமாக அரசியல் மயமாக்கப்பட்ட, காலம் கடந்த ஓர் பிரபல்யமான வழக்கு.
பழிவாங்கும் படலமாக காட்சியளிக்கும் இந்த வழக்கு கண்ணியத்துக்கு முதலிடம் கொடுத்து காந்தி தேசத்தைப் பெருமைப்பட வைக்கவேண்டும். ஜனநாயக நாடுகளில் மிகப் பெரியநாடான இந்தியாவின் கருணைமிக்க செயல்கண்டு மற்ற நாடுகளும் போற்றிப் புகழ வேண்டும்.
மனித உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் வழிகோலிய நாடென இந்தியா வர்ணிக்கப்பட வேண்டும், கணவனை இழந்த சோனியா காந்தி கருணையும், கண்ணியமும் கொண்டவர் எனக் காட்டும் விதத்தில் இந்த மரண தண்டனையின் இறுதி முடிவு அமையவேண்டும். காலம் கடந்த முடிவானாலும் கண்ணியத்தின் அடிப்படையில் கவனிக்கப் படவேண்டும்.
இந்திய மாநில ஆட்சியாளர்கள் மத்தியில் தனக்கொரு பெயரை தனது முயற்சியால் பெற்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களை இறுதி நேரத்திலாவது வந்து இந்த மூவருக்கும் வாழ்வுரிமைபெற உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
மனிதத்தை நேசிக்கும் நாடுகளும், மனிதாபிமானத்தை மதிக்கும் அமைப்புகளும் இந்த மரண தண்டனையை மாற்றியமைக்க தம்மாலான பங்களிப்பைத் தவறாதும், தாமதியாதும் தரவேண்டும்.
சட்டத்தின் பிடியிலிருந்து ஆயிரம் குற்றவளிகள் தப்பிச் சென்றாலும் ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்படக் கூடாது.
-கலாநிதி ராம். சிவலிங்கம்
துணைப் பிரதமர்,
நாடுகடந்த தமிழீழ அரசு
r.sivalingam@tgte.org


No comments:
Post a Comment