
கொழும்பில் நேற்று நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதியரசர் அனந்த் பாலகிட்ணரின் நினைவுப் பேருரையில் சொற்பொழிவாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உரையின் இறுதிக்கட்டத்தின் போது கண் கலங்கியதுடன் தழுதழுத்த குரலில் உரையாற்றினார்.
இனங்களுக்கிடைலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய சந்திரிகா குமாரதுங்க உரையின் இறுதிப் பகுதியில் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இலங்கையின் கொலைக்களம் என்ற காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அதாவது இந்தக் காணொளியை பிரித்தானிய தொலைக்காட்சியொன்றில் பார்வையிட்ட 28 வயதான தனது மகன் தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக விம்மியழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார். மேலும் தனது மகளும் இதே கருத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கண் கலங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார். மேலும் தனது பிள்ளைகள் பாதிக்கப்பட்ட ஏனையவர்களின் நலன் குறித்து சிந்திப்பது தொடர்பில் தான் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமூகங்களையும் சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி என்ற தலைப்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்நிகழ்வில் சொற்பொழிவாற்றியமை குறிப்பிடத்தக்கது


No comments:
Post a Comment