சனல்-4 தொலைக்காட்சியில் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தைப் பார்த்த தனது மகன் விமுக்தி , தன்னை ஓரு சிறிலங்கன் என்றோ பௌத்தர் என்றோ கூறுவதற்கு வெட்கப்படுவதாகக் கூறினார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று முன்னாள் நீதியரசர் கே.பாலகிட்ணர் நினைவுப் பேருரையாற்றிய போதே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு சந்திரிகா குமாரதுங்க தனது உரையில்-
“28 வயதான எனது மகன் விமுக்தி சனல்-4 தொலைக்காட்சியில் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தைப் பார்த்த பின்னர் தான் ஓர் சிறிலங்கன் என்றோ, பௌத்தர் எனவும் கூறுவதற்கு வெட்கப்படுவதாக, எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த காலைவேளையை நான் எனது வாழ்நாள் முழு வதும் மறக்கமாட்டேன்.
எனது மகளும் இதேபோன்ற கருத்தை தெரிவித்தார். எமது நாட்டவர்கள் இத்தகைய பயங்கர நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பது குறித்து அவர் அதிர்ச்சியையும் அச்சத்தையும் வெளிப்படுத்தினார்.
ஒரு தேசம் என்ற வகையில் சிறிலங்கர்கள் தோல்வியடைந்து விட்டோம் என்பதை ஏற்றுக் கொள்ளும் தன்னடக்கத்தை நாம் கொண்டிருப்போம்.
எமது தவறுகளை ஒப்புக்கொள்வதற்கான நேர்மையையும் திருத்தங்களை செய்வதற்கான பெருந்தன்மையையும் நாம் கொண்டிருப்போம்.
நிரூபிக்கப்பட்ட உண்மைகளையும் நேர்மையான விமர்சனங்களையும் தொடர்ச்சியாக நிராகரிப்பது எவரினதும் பிரச்சினையைத் தீர்க்காது.
நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பை அடையும் உயரிய இலக்கிற்கு எமது தலைவர்கள் தலைமை தாங்க வேண்டும்.
இந்தநாட்டின் பயங்கர வன்முறை மோதல்களுக்கு 1956ம் ஆண்டின் தனிச்சிங்கள சட்டமே காரணம்.
தமிழர்களின் மொழி சமத்துவத்துக்கான கோரிக்கை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டமையே, சமஷ்டிக் கோரிக்கைக்கும் இறுதியாக தனிநாட்டு கோரிக்கைக்கும் இட்டுச் சென்றது.
1958, 1977, 1980ம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் 1983ம் ஆண்டின் கறுப்பு ஜூலை என்பன சமாதானத்திற்கு ஆதரவான தமிழ்மக்களைக் கூட, சிங்கள ஆதிக்கமுள்ள நாட்டில் நீதியையும் சமவுரிமையையும் அடைய முடியாது என்று நம்பச் செய்தன.
சிறுபான்மையினரின் அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 1972, 1978ம் ஆண்டின் அரசியலமைப்புகள் தவறிவிட்டன.
போரில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி கொண்டமை குறித்து நானும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆனால் நாம் போரில் வென்றாலும் சமாதானத்துக்கான போரில் இன்னமும் வெற்றி பெற ஆரம்பிக்கக் கூட இல்லை என்ற உண்மையை குறித்து நான் கண்மூடியிருக்க முடியாது.
சமாதானத்தை வெல்வதற்கு 'ஏனையோரை' அபிவிருத்தியில் மாத்திரமல்லாமல், அதிகார பரவலாக்கத்துக்கான அரசாங்கத்தின் செயன்முறைகளில் முழுமையான, சமத்துவ பங்களார்களாக முழுமையாகவும் நேர்மையாகவும் உள்ளடக்க வேண்டும்.
நீண்டகாலமாக தீர்க்கப்படாத தமிழர் பிரச்சினையின் விளைவான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தமிழ் குடியியல் சமூகம் வேறுபட்டது என்பதை போரில் வெற்றி கொண்ட அரசாங்கமும் சிங்கள சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்கள் ஏனையோரைப் போன்றே சிறிலங்காவில் சமத்துவமான குடிமக்களாக வாழும் விருப்பத்தைக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் ஐக்கியமான அமைதியான சிறிலங்காவில் , சமத்துவமான உரிமைகளையும் வாய்ப்புகளையும் கொண்டவர்களாக சிங்களவர்களுடன் வாழ விரும்புகிறார்கள்.
அதேவேளை, மறுபுறம் சிங்களவர்களின் அச்சத்தை நியாயப்படுத்துவற்கு காரணங்கள் இருக்கின்றன.
சிறிலங்கா மீது கடந்த 14 நூற்றாண்டுறுகளில் 52 தடவை தென்னிந்திய ஆட்சியாளர்கள் படையெடுத்துள்ளனர் என்பதை வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன.
அவர்கள் சில தடவை வெற்றி கொண்டார்கள். சிங்கள மக்களின் பொதுவான அச்சத்திற்கு இது போதுமானதாக இருக்கலாம்.
பலமான தேசிய அடையாளத்தை ஒன்றிணைந்து ஏற்படுத்துவதற்காக அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் பௌத்தத்தை அரச மதமாக பின்பற்றினர்.
அத்துடன் 'எதிரிக்கு' எதிராக போரிடுவதற்கு படைத்திரட்டுவதற்கும் அதை பயன்படுத்தினர்.
நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வழங்கப்பட்ட மாகாண சபை முறைமையை வடக்கு கிழக்கிற்கு ஏன் வழங்க முடியாது?
சிறுபான்மையினருடனும் அவர்களின் தலைவர்களுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
எம்மிடமிருப்பதை பகிர்ந்து கொள்வதால் எமது பலம் குறைந்து விடப் போவதில்லை. மாறாக அது பிரிந்திருக்கும் சமூகங்களை ஒன்றிணைக்கும்.
நாட்டின் தலைவராக இருந்த எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் நான் தனிப்பட்ட ரீதியில் சமஷ்டிக்கு அர்ப்பணிப்புடன் இருந்தேன்" என்றும் மேலும் கூறியுள்ளார்.-புதினப்பலகை


No comments:
Post a Comment