இலங்கை அதிபர் ராஜபக்சேவின் போர்க் குற்றத்திற்கு அடிப்படை ஆதாரம் இருக்கிறது என்றும், இலங்கை பிரச்னையில் மத்திய அரசின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், டி.ராஜா கேட்டுக்கொண்டிருக்கிறார்.புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ராஜா எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் போர்க் குற்றத்திற்கு அடிப்படை ஆதாரம் இருக்கிறது. ஆனால், இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் இவற்றை மறைக்கும் வகையில், இந்திய அரசு எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்.
போர் குற்றம் புரிந்த இலங்கை அதிபர் மீது வெளிப்படையான விசாரணை வேண்டுமென்று கோரப்போகிறதா அல்லது தொடர்ந்து இலங்கை அரசிற்கு உடந்தையாக இருக்கப்போகிறதா என்பதை மத்திய அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.
இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜூலை 8ம் தேதி, அகில இந்திய அளவில், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஒருமைப்பாட்டு இயக்கம் நடத்த உள்ளோம். அதில் இலங்கை அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இந்திய மீனவர்கள், கடலில் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கு இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.


No comments:
Post a Comment