தமிழர்களின் பண்புகளின் ஒன்றான கொடுக்கும் பண்பை ஊக்கப்படுத்தவும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டில் பிறர்களுக்கு உதவும் முகமாக “தானம்” என்ற நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இச்செயல் திட்டமானது எமது தாயகத்தில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் எமது தாயக உறவுகளுக்காக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் “மண் வாசைன” போன்று எம் கனடிய மக்களுக்காக உதவும் முகமாக உருவாக்கம் பெற்றுள்ளது.
அதன் முதற்கட்ட செயற்பாடாக தமிழர்களின் தைத்திருநாளன்று சுமார் 2000 இறாத்தலுக்கும் அதிகமான உணவுப்பொருட்கள் ரொறோன்ரோ வாழ் கனடியத் தமிழ் உறவுகளிடமிருந்து சேகரிக்கப்பட்டு, கனடாவிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்வாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற டெயலி பிறட் உணவு வங்கிக்கு (Daily Bread Food Bank) கனடியத் தமிழர் தேசிய அவையினரால் வழங்கப்பட்டுள்ளது.
இந் திட்டமானது கனடாவில் வாழ்வாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்காக எம் தமிழர்களின் வீடுகளில் இருந்து ஆரம்பித்து பல பொது நிகழ்வுகளிலும் முன்னெடுத்துச் செல்ல கனடியத் தமிழர் தேசிய அவையினர் முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
எமது வரலாற்றில் எமது மன்னர்களும் தமிழ் அரசர்களும் தானம் செய்து தமது பொதுப்பணிகளை திறம்பட நடத்திச் சென்றார்கள். அவர்கள் வழி நின்று நாமும் எமது பணிகளில் ஒன்றாக “தானம்” என்ற நிகழ்வை அறிமுகப்படுத்தியுள்ளோம். இத்திட்டத்திற்கான ஆதரவையும் அங்கீகாரத்தையும் எம் கனடியத் தமிழ் உறவுகளிடம் கனடியத் தமிழர் தேசிய அவையினர் வேண்டி நிற்கின்றனர்.
இத்திட்டத்தைப் பற்றியோ அல்லது இத்திட்டத்திற்கான பங்களிப்பு செய்ய விரும்பினால் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வரதன் சோமசுந்தரம் அவர்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)
மின்னஞ்சல் - info@ncctcanada.ca


No comments:
Post a Comment