இலங்கைத் தீவில் தமிழரிற்கு எதிரான சட்டங்கள் யாவும் நிறைவேற்றப்பட்ட சட்டவாக்கமையமே பாராளுமன்றமாகும். பெரும்பான்மைசிங்கள கைகள் உயர்த்தபட வைக்கப்பட்டு, சிறுபான்மையினரின் உரிமைகளை படிப்படியாக பறித்தெடுக்கப்பட்ட 64 ஆண்டு கால தனிச் சிங்களத் தளமே அது.இலங்கைத் தீவை, இந்தியா தமிழ் நாட்டு மாநிலத்துடன் இணைத்து விட்டு, தமிழக சட்டசபையிலோ அன்றில் டெல்லிப் பாராளுமன்றத்திலோ, சிங்கள இனத்திற்கு எதிரான தீர்வுகளை முன் வைத்து வாக்ககெடுப்பிற்கு விடுவதற்கு சிங்களவர்களை அழைத்தால் அவர்கள் வருவார்களா? இதற்கு ஒப்பானதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நாடாளுமன்றத்திற்கோ அதன் தெரிவுக் குழுவிற்கோ அழைப்பதாகும்.
தீவில் யார் ஏன்ன முடிவை எங்குசென்றுஎடுத்தாலும் அது பாராளுமன்றத்தின் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் பெறவேண்டுமென்றும் அதுவே ஜனநாயகம் என்றும் வாதிட்டு சென்றடையும் தீர்வையும் தட்டிக் கழிக்கவும் ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலின் மார்ச் மாத கூட்ட காலப் புள்ளியை தாண்டிச் செல்லவதற்காகவுமே அனைத்துக் கட்சிக் கூட்டமென்று ஆயிரங்கால் மண்டபம் கட்டிய அதே அரசு பழையவற்றினை புதிய போத்தலிற்குள் வார்த்து அதற்கு தெரிவுக் குழு என்று பெயரிடவும் இட்டுள்ளது.
வரலாற்றில் உலகெங்கும் இரு தரப்பினர் போர்களத்தில் மோதாமலும் கடந்த மற்றும் சமகால சட்டநிர்வாகக் கோவைகளினாலும் நடைமுறையிலுள்ள ஆட்சி முறைகளினாலும் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளை தீர்க்கவே பேச்சுவார்த்தை மேசையை அல்லது வட்ட மேசையை நாடுவது மரபு.
அங்கு பேசி எடுபடும் முடிவுகளை அவை மீண்டும் பரிசீலித்து குழப்ப முனைவதில்லை. அமரர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடனான இறுதிப் பேச்சு ஆரம்பதினத்திலும் மகிந்த அரசு இதே குளறுபடியைச் செய்ய முனைந்தபோது, உங்கட நடைமுறைக்கு அப்பால் பேசத் தானே இவ்வளவு காசு செலவழித்து இரு தரப்பினரும் இங்குவந்துள்ளோம் என்று கூறி முறியடித்தார்.
ஆனால், 2002 இல் ரோக்கியோவில் நன்கொடை நாடுகளின் மாநாடு ஆரம்பித்த போதும் அன்றைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இங்கு சென்றடையப்படும் முடிவு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றே குறிப்பிட்டிருந்தார்.
அரசியலிற்கு நுழைய முன், தீவைச் சுற்றிப் பயணம் செய்த பண்டாரநாயக்கா என்ற மாணவன் பல்லின இலங்கைக்கு உகந்தது சமஷ்டி முறையே என்று பத்திரிகையில் பகிரங்கமாக கட்டுரையும் வரைந்தான்.
அதே பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் க ட்சிக்குள் மேலே இருந்தவர்களை மீறி தலைமைக்கு வந்து பிரதமராக முடியாது என்ற காரணத்தினால் பின்னாளில், எனது குழவை ஆதரித்துதேர்தலில் வெற்றிபெறச் செய்தால் தனிச் சிங்களச் சட்டத்தை 48 மணிநேரத்துள் அமுலாக்குவேன் என்று கூவிப் பதவிக்கு வந்தான்.
அன்று இதே பாணியில் இதே பாராளுமன்றத்திலிருந்து பண்டாரநாயக்கா வெளியேறியது இதே பாராளுமன்றத்திலிருந்துதான். அப்போது அவரோடு எழுந்து துணைக்கு சென்றவர் தான் இன்றைய ஜனாதிபதியின் தந்தை ராஜபக்ச ஆவார்.
கம்பியூட்டரிற்கு பதிலாக வெறும் தட்டச்சு இயந்திரமும் , மின் அஞ்சலிற்கு பதிலாக தந்தியும் இருந்த அன்றே 48 மணித்தியாலத்துள் விரைந்து செயற்பட்டு தனிச் சிங்களச் சட்டத்தை அமுலாக்கிய அதே சிங்கள இன வாத அரச இயந்திரம் ஒரிரு நாட்களிற்குள்ளேயே உலகில் உள்ள அத்தனை நவீன ஆயுதங்களை எல்லாம் இறக்குமதி செய்து பல்லாயிரக் கணக்கான அப்பாவி தமிழ்ப் பொது மக்களையும் கொன்றொழித்த அதே அரசப் பொறிமுறை இந்த இனப் பிரச்சனைக்குகாலக்கெடு விதிக்க இயலாது என்பது கேள்விக்குரியது.
இது மார்ச் மாதத்தை தாண்டபோடும் நாடகமாகும். இதனை ஊகித்தே சம்பந்தர் அவர்கள் வாக்குறுதிகளை நம்ப இயலாதென்று முதலிலேயே கிருஸ்னா அவர்களிடம் கூறியிருந்தார்.
அரசியல் பொருளாதார ஆற்றல் உள்ள தம்பி பசில் ராஜபக்சவை விட இராணுத் தீர்வில் ஆற்றல் உள்ள தம்பி கோத்தபாயாவை விரும்பிய ஜனாதிபதி அரசியற் தீர்வைவிட இராணுவத் தீர்வை நாடி நிற்பதே உண்மை. நாட்டில் எங்கு வேண்டுமானாலும் முகாம் அமைப்போம் என்பதும் வடகிழக்கிலிருந்து முகாங்களை நீக்கமாட்டோம் என்பதும் அரசியற் தீர்விற்கான வழிமுறைகளா?
என்றுமே சிங்கள தலைமைகள் எதுவும் அது எதிர்க் கட்சித் தலைமையாக இருந்தாலும் கூட , தமிழர்களை தங்கள் தேச பிரஜைகளாக கருதுவதேயில்லை. 1983 யூலையில் தமிழர்கள் அதற்குமுன் என்று மில்லாதவாறு இன அழிப்பிற்குள்ளானபோது. அன்றைய ஜனாதிபதி நல்லிணக்கத்தை நாடவில்லை.
மாறாக, போர்என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று இன அழிப்பு பிரகடனம் செய்தார். இதே ஜே.ஆர் தான் அன்று ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடனும் வெற்றுத் தாள் கையொப்பங்களுடனும் நிறைவேற்று அதிகாரத்துடன் அரச கட்டிலிருந்தவராவார்.
பின்னாளில் அன்றைய இந்திய ஜனாதிபதி வெங்கட்ராமனுடனான உரையாடலின் போது தான் தமிழர் பிரச்சனையைத் தீர்த்தால் தன்னை துரோகி என்று சிங்களவர் வரலாற்றில் எழுதி வைத்து விடுவார்கள் என்று குறிப்பிட்டதை திரு.வெங்கட்ராமன் எழுதியதை கிருஸ்ணா வாசித்தாரோ என்னமோ தெரியாது.
அதேபாணியில் தமிழரிற்கு எதையும் வழங்கினால் தன்னால் தனது கிராமத்திற்குபோக இயலாது என்று அண்மையில் ஜனாதிபதி கூறியது ஞாபகமிருக்கலாம்.
புலிகளை வென்ற இந்தபாராக்கிரம மகிந்தவே தனது கிராம மக்களை எதிர் கொள்ள முடியாதென்பதன் பொருள் என்ன? உலகிலேயே பயங்கரமான புலிகளைவிட பௌத்தசிங்கள இனவாதம் மோசமானதா? பயங்கரமானதா என்று கேள்வியை யாராவது பத்திரிகையாளர்கள் தான் அவரிடம் கேட்டறிய வேண்டும்.
அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைமை, அரசியலமைப்பு சட்டம், நீதிமன்றம், பாராளுமன்றம் எல்லாவற்றையும் விட இலங்கைத் தீவில் உச்சத்தில் உள்ளது.
தலைவர் மாவீரர் தின உரைகளில் சித்தரித்த இனவாதப் பூததந்தான். அதுவே பண்டாரநாயக்காவிற்கு குறி வைத்தது. எனவே இன்றைய மகிந்தவும் அதே பூததிற்கு பயந்தே ஆக வேண்டும். இல்லாவிடின் பண்டாரநாயக்க கோலம் பூண்ட மகிந்த மகிந்த நாயக்காஆக்கப்படலாம்.
இதே போன்று கற்றறிந்த பாடங்களை வைத்துத் தான் வேறு வழியின்றி தமிழ்த் தலைவர்கள் வட்டுக் கோட்டை தீர்மானத்தை சென்றடைந்தனர். அந்த தமிழ் மக்கள் தேர்தல் ஆணையை செயற்படுத்தவே புலிகள் புறப்பட்டனர்.
எனவே, போராட்டம் நியாயமானது என்பதை மனதிற் கொண்டு, ராகுல் காந்தி கேட்ட நீதியை வழங்கிய இந்திய நடுவன் அரசு, அதே நீதியை கொல்லப்பட்ட ஒவ்வொரு தமிழர் குடும்பத்தினரிற்கும் கிட்டும் படியான ஒரு முடிவையே சென்றடைய வேண்டும்.
உள்நாட்டு சிங்கள ஆயுர்வேதத்தால் குணமாகாத இந்தகொடிய சிக்கலான தேசிய இனப் பிரச்சினை நோய்க்கான மருந்தை அனைத்து வெளிநாடுகளிடமிருந்தும் ஆயுதங்களை இறக்குமதி செய்த மகிந்த சகோதரர்கள் இறக்குமதி செய்ய மறுப்பது ஏன்?
துறைசார் நிபுணத்துவம் சாரந்த தகவல்களையும் ஆலோசனைகளையும் பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமித்த மகிந்த சகோதர்கள் போர்க் காலத்தில் பெற்றார்கள். ஆம் , ஜனநாயத்தில் , வாக்கெடுப்புக்கள் எழுந்த மானத்தில் வாக்ககெடுப்பிற்கு விடப்படுவதில்லை. அந்தந்தத் துறைசார் நிபுணர்களின் பரிந்துரைக்கும் முடிவுகள் பலவற்றுள் எதாவதொன்றை தெரிவு செய்யவே வாக்ககெடுப்பானது தேவைப்படும்.
அதுவும், அந்தஅம்சம் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் நடாத்தப்படுவதே ஜனநாயகமாகும். ஒரு இனத்தின் மத்தியில் பெரும்பான்மையினரின் முடிவைச் சென்றடையவே வாக்ககெடுப்பு பயன்படுத்தப்படுவது ஜனநாயக மரபு.
அதை விடுத்து, சிறுபான்மை மாம்பழங்களையும் பேரீச்சம்பழங்களையும் ஒரே சாக்கில் பலாக்காய்களுடன் போட்டு ஐக்கியம் என்று மூட்டை கட்டினால் எஞ்சியிருக்கப் போவது பலாக் காய்கள் மட்டுமே.
வேண்டுமென்றால், பேரீச்சம்பழங்களை ஒரு முடிச்சாகவும் மாம்பழங்களை மறு முடிச்சாகவும் சமஷ்டி கட்டி அவற்றை பலாக்காய்களின் மேல் சோல்பரியின் அரசியலமைப்பின் 29 சரத்திற்கு அமைவாக வைப்பது வேறு விடயம்.
இந்த சமஷ்டியின் பெயராலேயே கட்சியை அமைத்தே தந்தை செல்வா போராடியது வரலாறு. எனவே தமிழர்களது குறைந்த பட்சக் கோரிக்கை வடகிழக்கு இணைந்த ஒரு சமஷ்டியாகவே இயலும்.
மகிந்த சகோதரர்கள் தங்கள் மக்கள் தமிழர்களை கட்டியாளும் அதிகாரத்தை விரும்பும் போது தமிழர்கள் தாங்கள் கொல்லப்படாமலிருக்க சமஷ்டி சுயாட்சி கேட்பது எவ்வகையில் ஜனநாயகத் தவறாகும்.
சுதந்திர இலங்கையின் இதே பாராளுமன்றம் தான் அமிர்தலிங்கம் தூக்கிலிட வேண்டும் என்று கூவியது. தமிழர் இனப் பிரச்சனைக்கு தளமாகவும் இன அழிப்பிற்கு உடந்தையாகவும் செயற்படடது. அந்தக் கொலைக் களத்திற்கு பலிக் கடாவைப் போல் கூட்டமைப்பினரை அரசு வாளேந்திய சிங்கக் கொடியுடன் அழைப்பதை சரிஎன்றுகிருஸ்னா ஒத்துக் கொண்டு கூட்டமைப்பினரை வலியுறுத்தும் மோசடியை புலம் பெயர் தமிழர்கள் தான் விவேகமாக முறியடிக்க வேண்டும்.
இதனை காந்தி தேசத்து மகாபாரத கிருஸ்ணா அவர்கள் பகவற் சிங்கையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசையும் சுவாமி விவேகானந்தர் சிலை உடைப்பையும் மனதிலிருந்தி தர்மம் நிறைந்த ஒரு முடிவை தீர்ப்பை நாடி சமகாலப் பந்தை தள்ளிவிட வேண்டும்.
முள்ளிவாய்க்கால் முடக்கப்பட்டபோது வெளிநாடுகளில் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கல் திரண்டெழுக் காரணம் புலிகளைக் காக்க என்றே அன்று பரப்புரை செய்யப்பட்டது. உண்மையாதெனில் வெளிநாட்டிற்கு தாய் மண்ணை விட்டு வந்த ஒவ்வொரு தமிழரும் சிறிலங்காவின் இன வாதத்தின் கொலைவெறியின் கொடூரத்தையும் அதன் விளைவுகளையும் சரிவர ஊகித்தமையினாலேயே என்பதை கிருஷ்னா புரிய முயல வேண்டும்.
முடிவாக நவ லங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் மகாகனம் பொருந்திய இனவாதம் என்பதையும் அதன் அரசிலமைப்பு மகாவம்சம் என்ற விகாரைக் குறிப்புக் கட்டு என்பதையும் அதன் படைகள் தீவுமுழுதும் வியாபித்துகால் நீட்டிப் படுக்கதுடிக்கும் துட்டகைமுனுவின் சேனைகள் என்பதையும் கிருஷ்ணா உணர வேண்டும்.
கூட்டமைப்பினர் இதை உணர்த்தபுலம் பெயர் தமிழர் ஊடகங்கள் புத்தி ஜீவிகள் கல்விமான்கள் எல்லாம் விரைந்து விழித்தெழ வேண்டும். பொய்ப் புரப்புரை இராஜீகம் தந்திரம் கபடம் போன்றவற்றில் கை தேர்ந்த இவர்கள் தமிழரை கல்லில் கட்டிகடலிற் தள்ளுவதை புலம் பெயர் தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்வார்கள் என்பதிலேயே இந்தியாவினதும் அமெரிக்காவினதும் அழுத்தங்கள் திசைமாறும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.


No comments:
Post a Comment