
சேந்தாங்குளம் பகுதியில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களில் வளர்ந்திருந்த பற்றைகளை அழிப்பது குறித்து வலி.வடக்குப் பிரதேசசபைத் தலைவர் சுகிர்தன் சிறிலங்கா கடற்படையினருடன் கலந்துரையாடி அனுமதி பெற்றிருந்தார்.
இதையடுத்து பற்றைகளுக்கு அந்தப் பகுதி மக்கள் நேற்றுமாலை எரியூட்டினர். அங்கு சென்ற சிறிலங்கா கடற்படையினர் பற்றைகளை எரித்தவர்கள் மற்றும் சேந்தாங்குளம் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், எரியும் பற்றைகளுக்கு தண்ணீர் ஊற்றி அணைக்குமாறும் பணித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பிரதேசசபைத் தலைவருக்கு தெரியப்படுத்தினர்.
அவர் உடனடியாக மேலும் சில பிரதேசசபை உறுப்பினர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அங்கு மீண்டும் வந்த சிறிலங்கா கடற்படையினர் பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிப் பிடியால் கண்மூடித்தனமாக தாக்கினர்.
தான் பிரதேசசபைத் தலைவர் என்று அவர் கூறிய போதும் சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்கியதால், அவரும் ஏனைய உறுப்பினர்களும் அங்கிருந்து ஓடித் தப்பினர்.
அவர்கள் சென்ற உந்துருளியை சிறிலங்கா கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment