சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி உலகத் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் மக்களின் போராட்டங்களின் வரிசையில், அமெரிக்க - நியூயோர்க் வாழ் தமிழர்கள், மக்கள் போராட்டம் ஒன்றினை கடந்த 24ம் நாள் வெள்ளிக்கிழமை நடத்தியுள்ளனர்.வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னால், பேரணியாகத் திரண்ட மக்கள், சர்வதேசத்திடம் நீதிகேட்கும் பதாகைகளையும் தாங்கியவாறு, ஒரே குரலில் அமெரிக்க அரசின் கவனத்தைக் கோரி நின்றனர். உலக மானிடம் வெட்கித் தலைகுனியும் வகையில், இந்த நூற்றாண்டின் பெரும் அவலமாக, இலங்கை அரசாங்கத்தினால் ஈழத் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட, போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப் படுகொலை தொடர்பில், சுயாதீனமான அனைத்துலக விசாரணையொன்றுக்கான பொறிமுறையொன்றினை, தொடங்கவிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரின் போது, அமெரிக்க அரசானது, முன்னின்று முன்னெடுக்க வேண்டுமென்பதே, ஒன்றுதிரண்ட மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக அமைந்தது.
ஐ.நா மனித உரிமைச் சபைக் 19வது கூட்டத் தொடரினை மையப்படுத்தி, அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொடர் மக்கள் போராட்டங்களின் தொடக்கமாக, நியூயோர்க்கில் இந்த மக்கள் போராட்டம் அமைந்திருந்தது.





No comments:
Post a Comment