
வவுனியா செட்டிகுளம் கதிர்காமர் நலன்புரி முகாமில் உள்ள இடம்பெயர் மக்கள் மீதான தொடர் கெடுபிடி நடவடிக்கையில் முகாமின் இராணுவப் பொறுப்பதிகாரி அபயக்கோன் ஈடுபட்டுவருவதாக மக்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.முகாம்மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணப் பொருட்களை அபகரிப்பது, அவர்களை கொச்சைப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற குறிப்பிட்ட அதிகாரி இன்று முகாம் மக்கள் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு குடும்பத்தவர்களும் தலா நூற்றைம்பது ரூபா கட்டாயமாகச் செலுத்தவேண்டும் என்று இராணுவ அதிகாரியால் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே ஆறு தடவைகள் தாம் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஏழாவது தடவையாகவும் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ள மக்கள் இராணுவ அதிகாரி தனது புகைப்படக் கருவி மூலமே புகைப்படம் எடுக்க இருப்பதாகவும், தனக்கு பணம் சுருட்டும் நடவடிக்கையாகவே இம் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் மக்களின் குடிசைகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பு வயர்களை பொலிஸார் அபகரித்துச் சென்றிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் இராணுவ அதிகாரியிடம் முறையிடச் சென்ற மக்களைப் பார்த்து இவற்றினை உங்கள் தலைவர் பிரபாகரனிடம் சென்று கேளுங்கள் என மிரட்டி கெட்ட வார்த்தைகளில் திட்டியிருக்கின்றார்.
எமது பகுதிகளில் குடியேற அனுமதித்தால் இவ்வாறான கெடுபிடிகளை நாங்கள் ஏன் சந்திக்கவேண்டும், எந்த ஒரு தொழில் வாய்ப்புக்களும் இல்லாத நிலையில் தொடர்ந்தும் முகாமில் அடைப்பட்டுக்கிடக்கும் நாங்கள் இராணுவத்தினர் தேவைக்காக கேட்கும் நேரங்களில் பணத்தினை வழங்குவதற்கு எங்கே செல்வது என்று முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த திருநாவுக்கரசு சின்னாச்சி என்ற வயது முதிர்ந்த பெண் கண்ணீர் மல்க எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
கதிர்காமர் நலன்புரி முகாமில் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த 684 குடும்பங்கள் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment