“ஜெனிவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்க வேண்டும் என்பதுதான் அநேக உறுப்பினர்களின் ஒருமித்த நிலைப்பாடாக இருந்தது. எனினும், இந்த முடிவைத் தலைமைப்பீடம் திடீரென மாற்றியமைத்ததற்கு அச்சுறுத்தல்கள் ஏதாவது விடுக்கப்பட்டனவா என்பது தொடர்பிலும், அழுத்தங்கள் ஏதும் பிரயோகிக்கப்பட்டனவா என்பது குறித்தும் தலைவர் சம்பந்தன் எமக்கு நேரில் தெளிவுபடுத்த வேண்டும். அவர் அவ்வாறு செய்வார் என நம்புகின்றோம்”இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
இந்தியா சென்றுள்ள எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக் கலநாதன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நாடு திரும்பியதும் இது தொடர்பில் அனைவரும் ஒன்றுகூடி பரிசீலித்துப் பார்த்தால் சிறந்ததாக அமையும் என்று தான் கருதுகின்றோம் என்றும் அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரசன்னமாகும் என முன்னர் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்றுமுன்தினம் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனிவா மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்றும், தாம் அவ்வாறு கலந்துகொண்டால், நாட்டில் கலவரம் ஏற்படக்கூடிய அபாயத்தன்மை உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் திடீர் முடிவு தமிழ் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கூட்டமைப்பின் இந்த முடிவு குறித்து மக்கள் பல்வேறு கோணங்களிலும் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர். அவர் மேலும் கூறியவை வருமாறு:
“தலைவரின் முடிவை ஏற்கவேண்டியது எமது தார்மீகக் கடமையாகும். அந்த வகையில் தலைமைப்பீடத்தின் முடிவை நான் ஏகமனதாக ஏற்கின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா மாநாட்டில் பிரசன்னமாக வேண்டும் என்பதுதான் அநேக உறுப்பினர்களின் ஏகமனதான நிலைப்பாடாக இருந்தது. இது விடயம் தொடர்பில் ஆராயப்பட்ட கூட்டத்தின் போது சாதகமானதொரு முடிவே எடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் (நேற்று முன்தினம்) தொலைபேசி ஊடாக தொடர்புகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முடிவை தெளிவுபடுத்தினார். சில முக்கியமான காரணிகளைக் கருத்திற்கொண்டே இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தலைமைப்பீடத்தின் முடிவை நாம் ஏற்கின்றோம். இருப்பினும், சக உறுப்பினர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடாமலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பில் தெளிவற்ற நிலை எமக்குள் ஏற்பட்டுள்ளது. இறுதி நொடியில் எமது முடிவை மாற்றியமைத்ததற்கு ஏதாவது அழுத்தங்கள் வந்தனவா, எச்சரிக்கை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் தலைமைப்பீடம் எமக்கு நேரடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். இதனை சம்பந்தன் ஐயா செய்வார் என்று நாம் கருதுகின்றோம். ஜெனிவா மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அநேக உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தது என்பதை மீண்டும் சுட்டிக்காட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.
இருப்பினும், நாம் மற்றைய பக்கத்தையும் சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது. காரணமில்லாமல் எமது தலைமைப்பீடம் எதையும் செய்யாது. ஏனெனில், ஜெனிவா மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொண்டால் நாட்டில் அசாதாரண நிலைமையைத் தோற்றுவித்து கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் முயற்சிக்கலாம்.
அதுமட்டுமின்றி, ஜெனிவாவில் இலங்கைக்கு சாதகமானதொரு நிலை ஏற்பட்டால், அது எமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இவை உட்பட தமிழ்மக்களின் அபிலாஷைகளைக் கருத்திற்கொண்டும் முடிவு மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.
இக் கூட்டத் தொடரில் பார்வையாளராக கலந்துகொண்டிருந்தால், சில முக்கிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கலாம். அந்தச் சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது என்பதை நான் ஏற்கின்றேன்” என்றார்.


No comments:
Post a Comment