இது தொடர்பாக கருணாநிதியின் இன்றைய கேள்வி-பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் சிங்கள இராணுவத்துடன் போர் நடந்த போது, நான் வாய்மூடிக் கொண்டிருந்தேன் என்பதாகக் குற்றஞ்சாட்டி நக்கலும் நையாண்டியுமாக ஆரம்ப காலத்திலிருந்தே நெடுமாறன் கூறி வருகிறார்.
இலங்கையிலே தமிழர்கள் மீது ராஜபக்ச போர் தொடுத்து விட்டார் என்றதும் தன்னுடைய கப்பல் படையை கொழும்பு நோக்கி அனுப்பியதைப் போலவும், அந்தப் படை இலங்கைப் போய்ச் சேருவதற்குள் நான் தடுத்து நிறுத்தி முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எல்லாம் நடந்து முடிந்து விட்டதைப் போலவும் பாவம், நெடுமாறன் கைபிசைந்து கொண்டு நம்மையும் தாறுமாறாகவும் தரக் குறைவாகவும் தாக்குகிறார்.
ஒரு நாட்டில் மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும்போது, ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்சினைகளில் தலையிட்டு தவிர்க்க முடியும் என்பதை, அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளிவான அறிவு படைத்தவர்கள் உணர முடியும்.
ஏதோ எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எரிச்சலைக் கொட்டித் தீர்ப்பவர்களுக்கு அதையெல்லாம் சிந்திக்க நேரமோ, நினைப்போ கிடையாது.
அவர்களுடைய நேரமும் நினைப்பும் திமுகவையும் அதன் தலைவராகிய என்னையும், “பால காண்டம்” முதல் “யுத்த காண்டம்” வரை பழிப்பதும், இழித்துப் பேசுவதும் தவிர, வேறு எதையும் கற்றதுமில்லை, கடைப்பிடித்ததுமில்லை.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் மோதல் நடந்தபோது நெடுமாறன் கூற்றுப்படி நானாவது வாய் திறக்காமல் சும்மாயிருந்தேன் என்பது உண்மையாகவே இருக்கட்டும்.
ஆனால் தமிழக சட்டமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீர்மானமே கொண்டு வந்து நிறைவேற்றினாரே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா! நெடுமாறனுக்கு அது நினைவிலே இருக்கிறதா?
அதுமாத்திரமல்ல, இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்று இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட நேரத்தில், போர் என்றால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று சொன்னாரே ஜெயலலிதா, அதாவது நெடுமாறனுக்கு ஞாபகம் இருக்கிறதா?
வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்பதைப் போல, மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்து, “டெசோ” மாநாட்டில் தனி ஈழம் பற்றிய தீர்மானம் கூடாது என்று சொன்னதைப் போலவும் அதை நான் ஏற்றுக் கொண்டதைப் போலவும் கலப்படமற்ற ஒரு பொய்யை நெடுமாறன் குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னைக்கு பெரும்பாலும் வரும் போதெல்லாம் என்னைச் சந்திக்கும் வழக்கமுடைய ப.சிதம்பரம், அப்படித்தான் அன்றைக்கும் என்னைச் சந்தித்தார். “டெசோ” மாநாடு பற்றியோ அதில் நிறைவேற்றும் தீர்மானங்கள் பற்றியோ அவர் என்னிடம் பேசவும் இல்லை, விவாதிக்கவும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் “டெசோ” மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் - “அண்டை நாடான இலங்கையில் அமைதியும் சமத்துவமும் நிலவுவதற்கு உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும் உரிமையும் பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது.
பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், மொழிகள் ஆகியனவற்றை உள்ளடக்கி ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்து வரும் இந்திய அரசு அண்டை நாடான இலங்கையில் இந்த நிலைகளுக்கு எதிரிடையாக நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழர் நெஞ்சங்களில் எழுந்துள்ளதை இம்மாநாடு இந்திய அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறது.
எனவே, இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி, ஈழத் தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டெடுத்து சமத்துவமும் அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள இந்திய அரசு முனைந்து, முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இந்தத் தீர்மானத்தில் வாழ்வாதாரம் பற்றி மாத்திரமல்ல, உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது என்பதை உள்ளமென ஒன்று இருப்போர் அறிவர். உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு பள்ளம் இருப்போருக்கு அது தெரிவதற்கு நியாயமில்லை.
ஈழம் என்ற சொல்லையே மாநாட்டுத் தலைப்பிலே பயன்படுத்தக் கூடாது என்று மத்தியிலே ஒரு அதிகாரி ஆணை பிறப்பித்திருக்கிறார் என்று ஏடுகள் எல்லாம் பெரிதுபடுத்தி, உடனடியாக வன்மையாக அதனை நாம் கண்டித்து, ஈழம் என்பது இன்று நேற்று வந்த சொல் அல்ல; “ஈழத்து உணவும், காழகத் தாக்கமும்” என்று “பட்டினப்பாலை” யிலேயே இடம்பெற்ற சொல் அது என்பதை எடுத்து விளக்கி கடிந்து கொண்ட பிறகு, மத்திய அரசு அதிகாரிகள் ஏற்கனவே பிறப்பித்த ஆணையை திருத்தம் செய்து வெளியிடப்பட்டது என்பதை இந்த எத்தர்கள் உணர மாட்டார்கள்.
- இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி காட்டத்துடன் தமிழர் தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறனை விமர்சித்துள்ளார்.


No comments:
Post a Comment