மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் செங்கல்பட்டு மற்றும் பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்கள் மூடப்படவேண்டும் எனக்கோரி செவ்வாய்கிழமையன்று பூவிருந்தவல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சிறப்புமுகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்யக் கோரி பூவிருந்தவல்லி முகாமில் இருக்கும் செந்தூரன் என்பவர் கடந்த 6-ந்தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் நேற்று முதல் தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தியிருக்கிறார்.
சிலவகைக் குற்றங்கள் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் வெளிநாட்டினர், வழக்கு நடைபெறும் காலத்தில் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். வழக்கு நடக்காவிட்டாலும் அவர்கள் குறித்த விசாரணை முடியும் வரை அவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள். சிறப்பு முகாம்களில் சிறையளவு கட்டுப்பாடுகள் உண்டு. அங்கிருப்பவர்கள் வெளியே சுதந்திரமாக சென்று வரமுடியாது, வெளியிலிருப்போர் அனுமதியில்லாமல் அவர்களைச் சென்று பார்த்துவரமுடியாது.
தாங்கள் குற்றமற்றவர்கள் எனவே தங்களை விடுதலை செய்யவேண்டும், சாதாரண முகாம்களில் வாழும் உறவினர்களுடன் தங்க அனுமதிக்கப்படவேண்டும் எனக்கோரி அடிக்கடி சிறப்பு முகாம்வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரேயடியாக சிறப்பு முகாம்கள் மூடப்படவேண்டும் எனக்கோரி மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. செந்தூரனின் உயிர்காப்பாற்றப்படவேண்டுமென இப்போராட்டத்தில் கலந்து கொண்ட வைகோ வலியுறுத்தினார்.
இலங்கையில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அடிக்கடி கோரிக்கை விடுக்கின்றனர். அதே நேரம் தமிழகத்தில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை விடுவிப்பது குறித்து பல ஆண்டுகளாக எவ்வித முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோவும் அவரது கட்சியினரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


No comments:
Post a Comment