சிரியாவின் யுத்த களத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஜப்பானிய பெண் ஊடகவியலாளர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,சிரிய அரசு இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை ஊக்குவித்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சுலைமான் அல் ஹலாபி மாவட்டத்தின் அலிப்போ எனும் நகரில் கிளர்ச்சியாளர்களுக்கும், சிரிய இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அகப்பட்டுக்கொண்ட ஜப்பானிய நிருபர் கொல்லப்பட்டார். அவருடன் சென்றிருந்த மூன்று நிருபர்கள் காணாமல் போனார்கள்.
கொல்லப்பட்டவர் 45 வயதான மிகா யமமொடோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய படுகொலையை அடுத்து சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு வன்முறை தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை அலிப்பா தாக்குதல் பகுதியில் புனித ரமலான் தினத்தன்று நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை டமஸ்கஸில் நடந்த ஜெட் தாக்குதல்களில் பெண்கள் சிறுவர்கள் அடங்களாக 9 பேர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிரியாவில் தொடரும் வன்முறைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சிரிய அரசு இராசயன ஆயுதங்களை பயன்படுத்த முனைப்பாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவ்வாறு தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் அது அமெரிக்காவின் சிவப்பு சமிக்ஞையை மீறும் செயலாக கருதப்பட்டு பாரிய பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
வெளிநாட்டு துருப்புக்கள் உள்நாட்டிற்குள் நுழைந்தால் தாம் இராசயன ஆயுதங்களை பயன்படுத்த அஞ்சப்போவதில்லை என சிரிய அரசு முன்னர் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இராசயன ஆயுதங்கள், தவறான கரங்களில் இருப்பது மிக மிக ஆபத்தானது என இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.


No comments:
Post a Comment