பிரித்தானியாவில் கல்வி கற்பதற்காக செல்லும் மாணவர்களுக்கு, மாணவர் விசாவுக்கான புதிய ஒழுங்கு விதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படுமென பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இன்று விடுத்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அறிமுகப்படுத்தப்படும் புதிய விதிகள் மூலம் பிரித்தானியாவில் கல்வி கற்ற பின் 2 வருடங்கள் தங்கியிருந்து தொழில் புரிவதற்கான வாய்ப்புக்கள் நிறுத்தப்படும் எனவும் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமே தங்கியிருப்பதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 6 ஆம் திகதியின் பின் பட்டம் பெறும் மாணவர்கள் பிரித்தானிய எல்லை முகவரகத்தினால் அங்கீகரிக்கப்படும் நிறுவனமொன்றினால் 20,000 ஸ்ரேலிங் பவுண் அல்லது அதற்கு அதிகமான சம்பளத்தில் தொழில்வாய்ப்பை பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குவிதிகள் மூலம் துஷ்பிரயோகங்கள் குறைக்கப்படும் எனவும் புத்திசாலித்தனமான சிறந்த மாணவர்கள் மாத்திரம் பிரிட்டனில் தங்கியிருப்பதையும் வேலை செய்வதையும் இது உறுதிப்படுத்தும் எனவும் பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேனியன் கிறீன் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment