இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் அடக்கப்படுகின்ற ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்று வேண்டும் என்று பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் உலகெங்கும் பரந்துவாழுகின்ற தமிழர்களுடைய ஆதரவுகள் வலுப்பெற்று வருகின்ற நிலையில் இன்று 11வது நாளாகவும் தொடர்ந்தது. ஜெர்மனின் பிரதான நகரில் ஒன்றான Saarbrücken என்ற இடத்தை வந்தடைந்த இந்த நடைப்பயணத்தில் பிரான்ஸ், யேர்மன் ஆகிய நாடுகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் மக்களும் இணைந்து இம் மூவரும் நடாத்தும் போராட்டத்திற்கான காரணங்களை விளக்கும் துண்டுப்பிரசுரங்களையும் அஞ்சல் அட்டைகளையும் விநியோகித்தனர்.
அத்துடன் தமிழ் நாட்டில் இருந்து உணர்சி கவிஞர் காசியனந்தன், ஈழ ஆதரவாளர் மணியரசன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது ஆதரவினை வழங்குவதாகவும் ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தாம் என்றும் பக்க பலமாக இருப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்தனர்.
அதேவேளையில் ஈழத்தமிழின அழிப்பிற்கான நீதிவிசாரணையை ஐ.நா சபை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கையெழுத்து வேட்டையினை மேற்கொள்வதற்கு தமிழ் நாட்டு உறவுகளும் தயாராகி வருகின்றனர் என்ற செய்தியையும் எமக்கு தெரியப்படுத்தினர்.
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அடக்கி சர்வதிகார போக்கினை கடைப்பிடிக்கும் சிங்கள பேரினவாதம் எம் மக்களை கொன்று குவித்து தாயகத்தினை சுடுகாடாக்கி விட்டு தற்போது அபிவிருத்தி என்ற பெயரில் நாடகமாடி சர்வதேசத்திற்கு ஏமாற்று வித்தை கற்பித்துவருகின்றது.
இந்த உண்மையை உலகிற்கு உணர்த்த மார்ச் 5ம் திகதி ஐநா முன்றலுக்கு தமிழ் உறவுகளே எம்மோடு கரம் கோர்த்து வாருங்கள் என்று நடைப்பயணத்தினை தொடர்கின்ற இம் மூவரும் உருக்கமான வேண்டுகோளை உரிமையுடன் கேட்டுநிற்கின்றனர்.




No comments:
Post a Comment