கொழும்பின் புறநகர் நாவின்னவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று முன்தினம் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.42 வயதான இந்த வர்த்தகர், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 அளவில் தெஹிவளை புகையிரத நிலையத்துக்கு அருகில் வைத்து கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை குறித்த வர்த்தகரை கடத்தியவர்கள் யார் என்ற விடயம் வெளியாகவில்லை.
அண்மையில் வெள்ளவத்தையில் வைத்து தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டார். அவர் தொடர்பிலும் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
தெஹிவளையில் வர்த்தகர் வெள்ளை வானில் கடத்தல்
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிங்கள வியாபாரியொருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய அமரதுங்க ஆராச்சிலாகே அஜித்குமார என்ற கோழி இறைச்சி வியாபாரியே வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தெஹிவளை புகையிரத வீதியில் கோழி இறைச்சி வியாபாரம் செய்துவரும் குறித்த நபர் நேற்று முன்தினம் தமது வியாபார நடவடிக்கைகளை முடித்துவிட்டு இரவு 8.15 மணியளவில் வீடு திரும்புவதற்காக தனது காரில் ஏற முற்பட்டபோது வெள்ளை வானில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை கண்ட வாகன சாரதியொருவரும் கடத்தப்பட்டவரின் மனைவியும் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் அண்மைக்காலமாக மஹரகம பகுதியில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கும் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment