இன்று அதிகாலை பிரான்சிய வானொலிக்கு பேட்டியளித்த பிரான்சின் வெளிநாட்டு அமைச்சர் அலியன் யூப்ப சிரியாவுக்கு எதிரான தடைகளை அமல் செய்ய புதிய பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஸ்யாவுடன் நடைபெறும் மேற்கண்ட பேச்சுக்கள் மூலம் பாதுகாப்பு சபையில் பிரேரணையை கொண்டுவந்து, மறுபடியும் சிரியாவுக்கு எதிராக வாக்களிக்க ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாகக் கூறினார். அத்தருணம் ரஸ்யா வீட்டோ அதிகாரத்தை பாவிக்காமல் இருப்பதற்காகவே இந்தப் பேச்சுக்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். தனது நாட்டின் சொந்த மக்களையே கொல்லும் சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு சபையில் தடைகளை கொண்டு வருவது தவிர்க்க முடியாத விடயம் என்றும் அவர் கூறினார்.
அவர் இவ்விதம் கூற, சீனாவின் முன்னாள் சிரியாவிற்கான தூதுவர் லீ கூகின் மறுபக்கம் சிரியாவை காப்பாற்ற பகீரதப் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் நேற்று கெய்ரோவில் வைத்து அரபு லீக்கின் செயலர் ஓபில் அல் அரபியை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து கட்டார், சவுதி அரேபிய நாடுகளின் தலைவர்களை சந்திக்க இன்று மின்னல் வேகத்தில் புறப்படுகிறார். ஐ.நாவில் மறுபடியும் பிரேரணை வர முன்னர் மத்திய கிழக்கு எதிர்ப்பு நிலமைகளை மாற்றிவிட வேண்டுமென இவர் வானில் பறந்தபடி உள்ளார்.
இப்படி இருவரும் இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் ஐ.நாவை இழுக்கக் காரணம் உள்ளது. நாளை வியாழன் சிரியாவுக்கு எதிரான பிரேரணை மறுபடியும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு பரிசோதனை வாக்கெடுப்பிற்காக வருகிறது. சிரியாவுக்கு எச்சரிக்கைவிட இது நடைபெறுகிறது. இத்தருணம் வீட்டோ பாவிக்க முடியாது, ஏனென்றால் இது ஓர் எச்சரிக்கை வாக்கெடுப்பாகும்.
இப்படியான பதட்டத்தில் சீன பிரதிநிதி பறந்து கொண்டிருக்க, சிரிய கோம்ஸ் நகரத்தில் இருந்து தலைநகர் டமாஸ்கசிற்கு எண்ணையை பரிமாற்றம் செய்யும் பிரதான குழாய் வெடித்து சிதறியது. அதிலிந்து தீ பரவி கரும்புகை சுழல் வானில் ஏறிக் கொண்டிருக்கிறது. சீன பிரதிநிதிக்கு எரியும் எண்ணெய்க்குழாயின் புகை நாசில் அடித்திருக்கும்.
அவ்வளவுதான் அவர் அடுத்த ஏவுகணையை ஏவினார். வானில் இருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சிரிய அதிபர் புதிய அறிவித்தலை விடுத்தார். எதிர் வரும் 26ம் திகதி நாட்டின் அடிப்படை சட்டங்களை மாற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படுமென இந்த வரியை எழுதும்போது சிரியா அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறது. ஐ.நா ஆதிசேடன் நாளை விஷத்தைக் கக்குமா இல்லை மத்திய கிழக்கு நாட்டில் சீனாவுக்கு எண்ணெய் அமுதம் கிடைக்குமா..? நிமிடத்துளிகளின் மரபணுக்கள் சூடேறிக்கொண்டிருக்கின்றன.


No comments:
Post a Comment