ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து குழப்பமான சமிக்ஞைகள் வெளிப்படுவதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, இலங்கைக்கு எதிராக, அமெரிக்காவின் ஆதரவுடன் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதற்கு இந்தியா முடிவு செய்திருந்தது. எனினும் இந்தியாவின் இறுதியான முடிவு குறித்த அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், கொழும்புக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, ஜெனிவா அமர்வுகளின் போது இலங்கைக்கு பக்கபலமாக இந்தியா இருக்கும் என்ற உறுதிமொழியை இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏஎவ்பிக்கு தகவல் வெளியிட்ட, தனது பெயரை குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர், “ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க இந்தியா உதவும்“ என்று உறுதிபடக் கூறியிருந்தார்.
அதேவேளை, தென் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் மேற்கொண்ட பரப்புரைகளின் மூலம் பெற்றுள்ள ஆதரவைக் கொண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை இருப்பதாகவும் கொழும்பு ஊடக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


No comments:
Post a Comment