
சிறிலங்காவைக் குறிவைத்துள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் சிறிலங்கா அரசின் சார்பில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச காணொலி இறுவட்டு ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளார்.
`Ruthless`என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த இறுவட்டு வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களை உள்ளடக்கியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல இந்த இறுவட்டை நேற்று வெளியிட்டு வைத்தார்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் அனைத்துலக ஊடகங்களால் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், படையினருக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் பொய்ப்பரப்புரைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், விடுதலைப் புலிகளின் கொடிய செயல்களை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் நோக்கிலுமே இந்த காணொலிக் காட்சி தயாரிக்கப்பட்டிருப்பதாக லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
இநதக காணொலியை சிறிலங்காவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் வழங்கவிருப்பதுடன், அனைத்துலக ரீதியில் நடைபெறும் மாநாடுகளில் சிறிலங்கா சார்பில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் மூலமும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையிலும், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப் நேரடி விசாரணைகளுக்காக சிறிலங்கா வந்துள்ள நிலையிலுமே இந்த காணொலியை சிறிலங்கா அரசு வெளியிட்டுள்ளது


No comments:
Post a Comment