
இனப்பிரச்சினைத்தீர்வுப் பேச்சில் அரசால் நிராகரிக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளைக் கேட்டுப் பிடிவாதமாக நிற்காமல் தமிழர்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்துக் கூட்டமைப்பு பேசுவதற்கு முன்வரவேண்டும். தமிழ் மக்களுக்கு அந்த மூன்று விடயங்கள் மட்டுமல்ல, பட்டியலிட்டுக்காட்டும் அளவுக்குப் பிரச்சினைகள் உள்ளன என்று தெரிவிக்கிறார் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல.
அத்துடன், பேச்சு மேசையில் ஒரு கருத்தையும், வெளியே இன்னொரு கருத்தையும் கூறித் திரியும் கூட்டமைப்பினர் இனப்பிரச்சினைப் பேச்சை முறிவுக்குட்படுத்துமளவுக்கு நடந்துகொள்கின்றனர் எனவும் குற்றஞ்சாட்டிய அமைச்சர், நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்துக் கூட்டமைப்பு இதுவரை தெளிவான முடிவை அரசுக்கு அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது அரசு கூட்டமைப்பு பேச்சுகளில் காணப்படும் விரிசல் நிலைமை குறித்து அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
கேள்வி: கடந்த 16 ஆம் கட்டப் பேச்சில் கூட்டமைப்பின் 3 அம்சக் கோரிக்கைகளான வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரம் ஆகியவற்றை அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்: ஆம். அந்த மூன்று கோரிக்கைகளையும் அரசு நிராகரித்திருக்கிறது. ஏனென்றால், அக்கோரிக்கைகள் தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விளக்கியுள்ளோம். இந்தியாவை ஒப்பிட்டு அவர்கள் பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் என்பவற்றைப் பேசுகிறார்கள். அதனைச் சற்றுச் சிந்திக்கவேண்டும்.
அத்துடன், பொலிஸ் அதிகாரம் வழங்கப்படும் பட்சத்தில் அது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
தமிழ் மக்களுக்கு இந்த மூன்று கோரிக்கைப் பிரச்சினைகளை விடவும் இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பட்டியலிட்டும் காட்டலாம். ஆனால், அவை அனைத்தையும் கூட்டமைப்பு புறந்தள்ளிவிட்டு இம்மூன்று அம்சக் கோரிக்கைகளில் பிடிவாதத்தனத்தைக் காட்டி நிற்கிறது.
எனவே, அவற்றை ஓரங்கட்டிவிட்டு ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுவதற்கு முன்வரவேண்டும்.
கேள்வி: நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கிறது. அதில் கலந்துகொள்ள மாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமன்றி, ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனவும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இத்திட்டம் எவ்வாறு சாத்தியப்படும்?
பதில்: இனப்பிரச்சினைத் தீர்வுத்திட்டத்திற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் அரசின் யோசனைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தங்களது தெளிவான பதிலை அரசிடம் அறிவிக்கவில்லை. இப்படியிருக்க, பேச்சு மேசையில் நன்றாகப் பேசிவிட்டு,வெளியே சென்று பல்வேறு கருத்துகளைப் பரப்பிவரும் கூட்டமைப்பு, தீர்வுப் பேச்சுகளை முறிவுக்குட்படுத்தும் வகையில் நடந்துகொள்கிறது. ஆனால், அரசு எவ்வழியிலாவது தீர்வைப் பெற்றுக்கொடுக்கவே முயற்சி செய்து வருகிறது. அனைத்துக்கும் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தால் நாங்கள் என்ன செய்வது? அத்துடன், அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுத் திட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் இதுவரை எழுத்துமூலமான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.
கேள்வி: நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக அரச தரப்பில் பெயர் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதா?
பதில்: ஆம். இதுவரை 19 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். பெயர் விவரங்களை வெளியிட சற்று கால அவகாசம் தேவை. இப்படிக் கூறினார் அமைச்சர்.
அமைச்சர் கெஹலியவின் இந்தக் கருத்துக் குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனைத் தொடர்புகொண்டு கேட்ட போது,
அரசியல் தீர்வு தொடர்பாக முழுமையானதொரு தீர்வுத்திட்ட யோசனையை அரச தரப்பு பேச்சுக்குழுவிடம் நாம் கையளித்தது மட்டுமின்றி, நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாகத் தமது உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதிக்குக் கூட அறிவித்துவிட்டோம். இந்த விடயங்கள் தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதுவும் தெரியாவிட்டால் அவர்களின் பேச்சுக் குழுவிடமும், ஜனாதிபதியிடமும் முதலில் கேட்டறிய வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு எவ்வாறானதொரு தீர்வு காணப்படவேண்டும் என்பது குறித்து எமது தரப்பு யோசனைகளை முன்வைத்து முழுமையானதொரு தீர்வுத்திட்டத்தை அரச தரப்பு பேச்சுக் குழுவிடம் கையளித்துள்ளது. நாம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாகத் தொடர்ந்தும் பேசி வருகின்றோம். கடந்த பேச்சின்போது வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரம் உட்பட மூன்று விடயங்கள் தொடர்பாகப் பேசினோம். அடுத்த சுற்றுப்பேச்சின்போதும் இந்த விடயங்கள் குறித்து ஆராய அரசு தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பிட்டதொரு விடயத்தைத் தெரிவுசெய்து நாம் பேசவில்லை. முழுமையானதொரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளோம்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாட்டை அரச தரப்பு பேச்சுக்குழுவிடம் நாம் தெரிவித்துவிட்டோம். ஜனாதிபதியிடமும் கூட எமது நிலைப்பாட்டை உறுதியாக அறிவித்துள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பாக அமைச்சருக்கு எதுவும் தெரியாவிட்டால் முதலில் அது குறித்து அவர்களின் பேச்சுக்குழுவிடமும், ஜனாதிபதியிடமும் தெளிவாகக் கேட்டறிய வேண்டும் என்றார் அவர்


No comments:
Post a Comment