
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலைமை தொடர்பாக நேரில் ஆராய்வதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலைமை தொடர்பாக நடத்தப்படவுள்ள விவாதம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே இந்தக் குழுவினர் கொழும்பு வந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவினர் சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமைகளுக்கான சிறப்பு தூதுவரும், அமைச்சருமான மகிந்த சமரசிங்கவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இதன்போது போருக்குப் பிந்திய சூழலில் மனிதஉரிமைகளை பாதுகாப்பதற்கும், ஊக்கவிப்பதற்கும், புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கும் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசியத் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதாக மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் றிச்சட் ஹொவிற், டேவிட் மாட்டின், அன்னா கோமிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை கொழும்பு வந்த இவர்கள் நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
இந்தக் குழுவினர் வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணங்களை மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்து வருகின்றனர்.
இன்று மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்குச் செல்லும் இவர்கள், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.


No comments:
Post a Comment