
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து 3 பேரும் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் 1000 பேர் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சென்னை கடற்கரை கண்ணகி சிலை அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.
இதையடுத்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே ஆலந்தூரில் இருந்து இன்று காலையில் மோட்டார் சைக்கிள் பேரணி புறப்பட்டது. நடிகர்கள் சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆலந்தூரில் இருந்து 300 பேர் மோட்டர் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.
கவிஞர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா, எழுத்தாளர்கள் விஜயலட்சுமி, கவின் மலர், பிரியா தம்பி, மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், முருகையன் மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் பேரணியில் பங்கேற்றனர்.
மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிந்திருந்தனர். தாம்பரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக செல்லும் மோட்டார் சைக்கிள் பேரணி வேலூர் சிறை முன்பு நிறைவடைகிறது.
செல்லும் வழிகளில் எல்லாம் அந்தந்த பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள் பேரணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மொத்தம் 1000 பேர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் சென்ற 30 பேர், வேலூர் சிறைக்கு சென்று பேரறிவாளன், சாந் தன், முருகன் ஆகியோரை சந்தித்து பேசுகின்றனர்.


No comments:
Post a Comment