
தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஆனந்த விகடன் வார இதழின் கட்டுரைக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
ஆனந்த விகடன் வார இதழில் 'வீழ்வேனென நினைத்தாயோ' என்ற தொடர், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் சி. மகேந்திரன் அவர்களால் எழுதப்படுகின்றது. இதன் முதல் பகுதி 12.08.2011 நாள் இதழில் வெளியாகியது.
இத்தொடர் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களையும், சமகால நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இத்தொடர் சி.மகேந்திரன் அவர்களால் எழுதபட்ட ஒரே காரணத்திற்காக இலங்கை அரசால் தடைசெய்யபட்டு இவ்விதழின் பக்கம் 30-34 வரையிலான 5 பக்கங்கள் நீக்கப்பட்டே இலங்கையில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட அப்பகுதி இங்கே தரப்படுகின்றது.
உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன?
இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம்.
மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்!
இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது.
இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்து நிற்கிறது.
அதன் புவியியல் இருப்பை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றும் ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள அந்த நிலம், மிகவும் எழில் நிறைந்தது.
கிளிநொச்சியில் இருந்து ஒருவர் முள்ளி வாய்க்கால் செல்ல வேண்டும் எனில், இதற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பரந்தன் சந்திக்கு முதலில் செல்ல வேண்டும்.
முல்லைத் தீவுக்கும் இந்த பரந்தன் சந்திக்கும் இடையில்நெடுஞ் சாலை ஒன்று உள்ளது. இந்த நெடுஞ்சாலைக்கு ஏ 35 என்று பெயர்.
பரந்தன் சந்தியில் தொடங்கி, முரசு மோட்டை, தரும புரம், விஸ்வமடு, மூங்கிலாறு, உடையார் கட்டு, புதுக் குடியிருப்பு என்று நீண்டு செல்லும் இந்தச் சாலையின் இரு மருங்கும் தொன்மையான பல ஊர்கள் உள்ளன. இதில் புதுக் குடியிருப்பு, முக்கியமான நகரம்.
புதுக் குடியிருப்பைத் தாண்டியவுடன், புது உலகம் ஒன்று தோற்றம் தரும். அழகிய நெய்தல் நிலம் அது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் இங்கே இருந்தே ஆரம்பமாகிறது.
இன்று உலகமே அறிந்துவைத்துள்ள, மழைக் கால ஆறுகளின் நன்னீர்த் தொகுப்பான நந்திக் கடல் இங்கே தான் இருக்கிறது.
நந்திக் கடல் ஒரு கடல் அல்ல. உப்பற்ற நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் காயல் அது. நத்தைகள் மிகுந்த கடல் என்பதால்தான், நந்திக் கடல் என்ப தாகவும் சிலர் விளக்கம் தருகிறார்கள்


No comments:
Post a Comment