
தமிழர்களின் தாயகப் பிரதேசங்களான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சிறீலங்கா அரசாங்கமும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பமும் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருமலையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சீனன்குடா விமான நிலையம் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லைப் பகுதியான வாகரையில் விமான நிலையமொன்றை அமைப்பதற்காக சிறீலங்கா விமானப்படை காணிகளை அபகரித்துள்ளது.
சுமார் 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக கையகப்படுத்தப்பட்டு அப்பிரதேசத்தை சுற்றி முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கின் தொடர்பிற்கான உயிர்ப்பாதையெனக் கருதப்படும் வாகரையில் இவ் விமான நிலையத்தை அமைப்பதன் மூலம் அது தொடர்பிலான சிங்கள குடியேற்றங்களை அப்பகுதியில் மேலும் அமைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாகத் தென்படுகின்றன.
அறுகம்குடா, பாசிக்குடா, தென்னையடிக் குடா ஆகிய பிரதேசங்களை உல்லாசபுரிகளாக்கும் முயற்சியில் அதற்கான போக்குவரத்து மற்றும் வணிகத் தொடர்புகளை அதிகரிக்கவே இந்த முயற்சி செய்யப்படுகிறது.
பாசிக்குடாவில் தற்போது இயங்கிவரும் நாமல் ராஜபக்ச'வின் மூன்று நட்சத்திர உல்லாச விடுதி விஸ்தரிக்கப்படும் அதேவேளை, பசில் ராஜபக்சவின் உல்லாச விடுதியொன்றும் துரிதகதியில் இப் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த உல்லாசப் பயணத்துறை வியாபாரத்தில் ராஜபக்ச'வின் குடும்பத்தினரும் அவர்களின் நெருங்கிய உறவினர்களும் ஈடுபடுவதாலேயே அரசாங்கத் திணைக்களங்கள் இந்த நடவடிக்கைகளிற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
வெளிநாட்டவர்களைக் கவரும் வகையில் பல மாடிகளைக் கொண்ட இந்த உல்லாச விடுதிகளில் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகள் பலவும் அமைக்கப்பட்டு வருகின்றது. இப்போதே இப்பகுதிகள் சிங்களப் பயணிகளால் நிரம்பி வழிவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கண்டனத்திற்கு மத்தியிலும் முல்லைத்தீவில் அமையவிருக்கும் உல்லாசக் கடற்கரைக்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்துள்ள சிறீலங்கா அரசு அதனையண்டிய சுமார் மூன்று சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவிலான காணிகளை ராஜபக்ச சகோதரர்களிற்கு நெருக்கமான சிங்களவர்களிற்கு மிகவும் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உல்லாச விடுதிகள் கட்டுவோருக்கு 20 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பும், கடைகள் மற்றும் இதர வணிகங்களை அமைப்பவர்களிற்கு 1 முதல் 5 வரையான ஏக்கர் காணிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு உல்லாச நகரிற்கு வெளிநாட்டவர்கள் தங்களின் படகுகளில் சென்று தரித்துத் திரும்பும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேபோன்றதொரு திட்டத்தை கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான சாட்டியிலும், உல்லாசப் படகுகளின் துறையாக கிளிநொச்சி மன்னார் தொடுவாய்களிற்கு இடைப்பட்ட பூநகரியின் கௌதாரிமுனையை அண்டிய கடற்பகுதியை ஆக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது.


No comments:
Post a Comment