
தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் வைத்துள்ளது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என நெதர்லாந்து சட்டத்தரணி விக்டர் கோப் ஐரோப்பிய நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்காக விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கக்கோரிய நாடுகளிடம் ஐரோப்பிய நீதிமன்றம் விளக்கம்கோரியபோது, இந்த விடயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் முரண்பாடான கருத்துக்கள் எழுந்துள்ளதாக தெரியவருகின்றது.
சிறீலங்காவின் பயங்கரவாதப் போரை ஆதரித்த ஐரோப்பிய நாடுகள், விடுதலைப் புலிகள் மீதான தடையைப் போடுவதற்கு முன்னின்று செயற்பட்டன. ஆனால் தற்போது நடந்து முடிந்த இன அழிப்பும் அதன் பின்னரான சனல்-4 தொலைக்காட்சியின் ஆதாரங்கம், ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையும் சிறீலங்காவின் இனப்படுகொலை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக தமது வாதங்களை முன்வைப்பதற்கு முக்கிய நாடுகள் சில மறுத்துள்ளதாகவும் அறியவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத போராட்டங்களில் ஈடுபடப் போவதில்லை. அரசியல் வழிமுறைகளில் இலக்கை எட்டுவதற்கு முயற்சிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர் என விக்டர் கோப் தனது மனுவில் தெரிவித்திருந்தார். எனவே, அவர்களின் ஆயுத அச்சுறுத்தல் இல்லையென அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக அடையாளப் படுத்தியே ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ளது. இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் சுயாட்சிக்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டம் நடத்தினார்கள் என்றும், தமிழ் மக்கள் சுயாட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுயாட்சி அதிகாரம் என்பது சர்வதேச சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுயாட்சி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளவதற்காக போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றில் ஒரு தப்பினரை மட்டும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது எந்தளவிற்கு நியாயமானது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், விடுதலைப் புலிகளின் போராட்டமானது சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானதாகவோ அல்லது தேசிய குற்றவியல் சட்டத்திற்கு எதிரானதோ அல்ல என்றும் அதனால் இச்சட்டங்களுக்குள் அடக்கமுடியாது என்றும் கூறியுள்ளார். அத்தோடு ஐரோப்பிய சட்டங்கள் குற்றம்சாட்டப்பட்டவர் தனக்காக வாதிடுவதற்கும் தனக்குரிய சட்டப் பாதுகாப்பைப் பெறுவதற்கும் எதிரானதாகவே அமைந்துள்ளது.
அத்துடன், முறைமையற்ற சட்டங்களின் மூலம் முறையற்ற தடையை விடுதலைப் புலிகள் மீது கொண்டுவந்ததனால், இதற்கான நட்டஈட்டை விடுதலைப் புலிகளுக்கு நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, நெதர்லாந்து, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளிலும் தமிழர்கள் தண்டிக்கப்படக் கூடாது எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தடை நீக்கப்பட்டால் புலம்பெயர்ந்த ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் தம் மீது குத்தப்பட்ட பயங்கரவாதிகள் என்ற நிழல் நீங்கி, சுதந்திரமாக செயற்படமுடியும் என சட்டஅவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விடுதலைப்புலிகள் மீது தடை விதிக்கக்கோரிய நாடுகளிடம் இது தொடர்பாக ஐரோப்பிய நீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது. இந்த விளக்கத்தை எதிர்வரும் செப்டெம்பர் 19ம் திகதிக்க முன்னதாக வழங்குமாறு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னின்று நடவடிக்கை எடுத்த பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இந்தத் தடைக்கு எதிரான விவாதத்தில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளது. எனினும், பிரித்தானியாவும் நெதர்லாந்தும் தடை நீக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கமே இத்தடையை நீடிக்க விரும்புவதாகவும் எனினும், பிரித்தானிய நீதிமன்றம் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதையும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் விரும்புவதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை, நெதர்லாந்து அரசாங்கம் இந்தத் தடைக்கு எதிராக வாதிட விரும்பாதபோதும் அந்நாட்டின் சில உள்ளூர் அரசியல்வாதிகள் இந்தத் தடையை நீடிக்க விரும்புவதாகவும், இவர்கள் சிலரின் (சிறீலங்காவின்) விருப்பங்களுக்காகவே இதனை மேற்கொள்ள முனைவதாகவும் தெரியவருகின்றது.
இலங்கையில் போர் நிறைவடைந்ததன் பின்னர் நெதர்லாந்தில் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டதற்கும் இவ்வாறானவர்களின் அழுத்தமே காரணம் என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, சனல்-4 ஒளிபரப்பு மற்றும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை பார்வையிட்ட அமெரிக்காவின் நீதிபதிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள் வழக்குகளில் அவர்களுக்கு எதிராக தீர்ப்புச் சொல்வதற்கு தயங்கிவரும் நிலையில், அதே சட்டமுறையைக் கொண்டுள்ள பிரித்தானியா விடுதலைப் புலிகளுக்கு எதிராகநடவடிக்கையை தொடரமுனைவது தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அத்துடன், பிரித்தானியா அந்நாட்டின் நீதிமுறைமைக்கு எதிராகவே விடுதலைப் புலிகளுக்கு மீதான தடையை நீடிக்க விரும்புகின்றது.


No comments:
Post a Comment