
கடந்த 2006 இல் செஞ்சோலை வளாகத்தில் முகாமைத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சிறிலங்கா இனவாத அரசின் இனவெறிக் குண்டு வீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 மாணவச் செல்வங்களையும் நாமிழந்து நேற்றைய தினத்துடன் ஆண்டுகள் ஐந்து நிறைவடைகின்றது.
இதனையொட்டி சுவிஸ் பேர்ண் மாநகரில் அமைந்துள்ள தமிழர் இல்ல கௌசல்யன் கலைக் கூடத்தில் ஓர் நினைவு கூரல் வணக்க நிகழ்வு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 14.08.2011 ஞாயிற்றுக்கிழமை 16.00 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி 61 மாணவச் செல்வங்களின் திருவுருவப் படங்களுக்குமான ஈகைச்சுடரேற்றல், மலர் வணக்கம் என்பவற்றுடன் தமிழின உணர்வாளர்களின் செஞ்சோலைச் சிறார்களின் அனுபவப் பகிர்வும் நினைவுகூரலும் இடம்பெற்றது.
மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமிழின உணர்வாளர்களும் கலந்துகொண்டு ஆத்மபூர்வமாகத் தமது வணக்கத்தினை எமது மாணவச் செல்வங்களுக்குச் செலுத்திக்கொண்டனர்.
இறுதியாக அவர்களது ஆத்மா சாந்தியடைய இலட்சிய உறுதியுடன் ஒன்றிணைந்த தமிழராய் எமது இலட்சியம் ஈடேறும்வரை தொடர்ந்து செல்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.





No comments:
Post a Comment