நடிகர் பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து வழக்கில் சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றம் ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.நடிகர் பிரபுதேவா, ரம்லத் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, பிரபுதேவா தனியே வசிக்கத் தொடங்கினார். பிரபுதேவா, நடிகை நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக செய்திகளும் வெளியாகின.
இந்த நிலையில், கணவரை தன்னோடு சேர்த்து வைக்கக் கோரி சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ரம்லத் மனு தாக்கல் செய்தார். வழக்கு நிலுவையில் இருந்தபோதே, ரம்லத் மற்றும் குழந்தைகளுக்கு பணம், சொத்துகளைப் பிரித்து வழங்க பிரபுதேவா ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, விவாகரத்துக்கு பரஸ்பரம் சம்மதம் தெரிவித்து இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு ஜூன் 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபுதேவா, ரம்லத் இருவரும் ஆஜராகவில்லை.
இதனால் ஜூலை 10-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. குடும்ப நல நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை வந்த நடிகர் பிரபுதேவா, அவரது மனைவி ரம்லத் ஆகியோர் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, சனிக்கிழமை பிற்பகலில் நீதிபதி பாண்டியன் வழக்கை விசாரணை செய்தார்.
பிரபுதேவா, ரம்லத் இருவரும் ஆஜராகி இரண்டு மணி நேரம் சாட்சியம் அளித்தனர். விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் ஜூலை 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
விசாரணையின்போது, மூன்று வீடுகள், பத்து லட்சம் ரூபாயை, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வழங்க பிரபுதேவா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது


No comments:
Post a Comment