இரத்தக்கறை படிந்த நாட்களாகவும் தூக்கமின்றிய இரவுகளாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத்தமிழினமே உறவுகளின் அழுகுரலோடு கடந்து செல்லும் இந்நாட்களை நாம் வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தால் எங்கள் உறவுகளின் சமாதிகள் ஒன்றையும் கூட சிங்கள பேரினவாதம் விட்டுவைக்கப்போவதில்லை.
நாம் அனைவரும் ஒரு முக்கியமான கால கட்டத்தில் எமது வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது.
நாம் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் பெப்ரவரி 4 ஆம்திகதியை கறுப்புதினமாக முன்னெடுத்து உலகின் கண்களில் உண்மையைக் எடுத்துச் சொல்வோம்.நாம் ஒவ்வொரு தமிழனும் எமக்காய் குரல் கொடுக்கின்றபோதுதான் எமது தேசத்தின் விடுதலை சாத்தியமாகும் . "விண்மட்டும் புகழுற்று நின்ற தமிழன் விறைப்பற்று வீழ நாம் விட்டுவிடக்கூடாது."
எம் இனத்தை முழுமையாகத் துடைத்தழிப்பதற்காய் எத்தனையோ வஞ்சகங்களையெல்லாம் சிங்களம் தயங்காமல் செய்கின்றது. தமிழனின் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் எமது பலம் தான் உறவுகளின் உயிரின் இருப்பை நிர்ணயிக்கப்போகின்றது.
எத்தனையோ இடர் மிகுந்த பொழுதுகளிலெல்லாம் எம்மை எமது போராட்டம் தான் காப்பாற்றி வந்திருக்கின்றது. ஆனால் இன்றோ மிகுந்த நெருக்கடியான ஓர் சூழ்நிலையில் இமயவரம்புகளில் நின்று எம்தேசம் போராடிக்கொண்டிருக்கின்றது.பாரெங்கும் வாழும் தமிழர்களே வரலாற்றுக் கடமை எம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றது.


No comments:
Post a Comment