
தந்தையின் மரணச் சடங்கில் கலந்து கொள்கின்றமைக்கு நியூசிலாந்து வர விண்ணப்பித்து இருந்த இலங்கைத் தமிழ் ஆண் ஒருவருக்கு விசா மறுக்கப்பட்டு உள்ளது.
இந்துவான சுப்பையா மயில்வாகனம் ( வயது – 78 ) என்பவருக்கு 10 பிள்ளைகள். ஒருவர் மாத்திரம் மகன்.
மனைவி தங்கமுத்து, மகள் நிர்மலா, பேரக் குழந்தைகள் நால்வர் ஆகியோருடன் சுப்பையா மயில்வாகனம் நியூசிலாந்தில் வசித்து வந்தார். இவர்கள் நியூசிலாந்து பிரஜாவுரிமை பெற்றவர்கள். சுப்பையா மயில்வாகனத்தின் பிள்ளைகளில் அநேகர் இந்தியா அல்லது இலங்கையில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் சுப்பையா மயில்வாகனம் கடந்த 01 ஆம் திகதி இறந்து விட்டார்.
இந்துக்களின் பாரம்பரியப்படி தந்தைக்கு உரிய இறுதிக் கிரியைகளை மகன்தான் கட்டாயம் செய்தல் வேண்டும்.
மகன் வாமதேவா இந்தியாவில் வசிக்கின்றார். விசாவுக்கு விண்ணப்பித்து இருக்கின்றார்.
ஆனால் இவருக்கு இது வரை விசா வழங்கப்படவில்லை. இதனால் சுப்பையா மயில்வாகனத்தின் மரணச் சடங்கு இன்னமும் இடம்பெறவில்லை. சடலம் கடந்த 24 நாட்களாக பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளது.
மயில்வாகனத்தின் மகன் சட்டவிரோதமாகதான் இந்தியாவில் தங்கி உள்ளார் என்று நம்புகின்றனர் என்றும் இவர் விசா நிபந்தனையை மீறி நியூசிலாந்தில் தங்கக் கூடிய ஆபத்து காணப்படுகின்றமையால் விசாவை நிராகரித்து விட்டனர் என்றும் குடிவரவுப் பேச்சாளர் ஒருவர் ஓரிரு நாட்களுக்கு முன் தெரிவித்து உள்ளார்.
மயில்வாகனத்தின் பெண் பிள்ளைகளில் ஒருவரான கமலரூபி என்பவர் இலங்கையில் வசிக்கின்றார். தகப்பனின் மரணச் சடங்கில் கலந்து கொள்கின்றமைக்கு விண்ணப்பித்து இருந்தார். இவர் இலங்கைக்கு திரும்பிச் செல்வார் என்கிற உத்தரவாதம் இல்லாமையால் இவருக்கான விசாவையும் நிராகரித்து உள்ளனர் என்று அதிகாரி அறிவித்து உள்ளார்.
மனிதாபிமானம் கருத்தில் கொள்ளப்படத்தான் வேண்டும், ஆனால் விசாவுக்கான தேவைப்பாடுகள், நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் குடிவரவு திணைக்களம் உறுதியாக உள்ளது.
இருப்பினும் விசா மறுப்புக்கு எதிராக குடிவரவு அமைச்சரிடம் மேன்முறையீடு செய்ய முடியும்.
மயில்வாகனத்தின் குடும்பத்தினர் மிகவும் மனம் உடைந்து போய் உள்ளார்கள்.


No comments:
Post a Comment