
வடக்கில் எதிர்வரும் 23ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறிலங்கா அரசு குண்டர் குழுக்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பரப்புரைகளை மேற்கொள்வதற்கு என்ற பெயரில் தங்கியுள்ள இவர்கள் மூலம், உள்ளூராட்சித் தேர்தலில் குழப்பங்களை விளைவித்து வெற்றி பெறவே ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் தெரியாத ஓய்வுபெற்ற சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தனது குழுவினருடன் யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
தமிழ் தெரியாமல் எவ்வாறு பரப்புரை செய்கிறீர்கள் என்று அந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, வீடு வீடாகச் சென்று “வணக்கம்“ என்று கூறிவிட்டு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருவதாகக் கூறியுள்ளார்.
எப்படியும் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று கங்கணம் கட்டியே, சிறிலங்கா அரசாங்கம் தென்பகுதியில் இருந்து குண்டர் குழுக்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment