என்னை அவர் தவிர்ப்பதன் மூலமே இந்தியாவின் நிலைப்பாட்டை என்னால் அறிந்துகொள்ள முடியும். மன்மோகன்சிங் நல்ல மனிதர். ஆனால், நல்ல பிரதமர் அல்லர். சோனியா காந்தியால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை அவர்.
இவ்வாறு தெரிவித்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான வைகோ.
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மேற்குலகம் கொண்டுவரவுள்ள பிரேரணை தொடர்பில் “உதயனுக்’குக் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறியவை வருமாறு:
மனித உரிமை மீறல்களுக்கெதிராக உலக நாடுகள் ஜெனிவாவில் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு இந்தியா ஆதரவை வழங்கவேண்டும். குறிப்பாக இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை இந்தியா ஆதரிப்பது அவசியம். இதனை மன்மோகனுக்கு நான் அவசர கடிதமொன்றில் சுட்டிக்காட்டினேன். அதேபோல், அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த நிலைமையின் பாரதூரத்தை விளக்குவதற்கு இதுவரை முயன்றுவருகிறேன். ஆனால், அது இதுவரையிலும் கைகூடவில்லை.
என்னுடன் நேரடியாக தொலைபேசியில் பேச முன்வராமல் இழுத்தடிப்பதன் மூலம் பிரதமரினதும், இந்தியாவினதும் நிலைப்பாட்டை என்னால் இலகுவாக ஊகித்துக் கொள்ள முடியும். இது மிகவும் கவலைக்குரியது.
இவர்கள் வரலாற்றுத் தவறொன்றை செய்துகொண்டிருக்கின்றனர். இலங்கையில் தமிழர் பாதுகாப்பு ஒன்றே இந்தியாவினது பூகோள பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும். இந்திரா காந்தி அம்மையாருக்கு அந்த தொலைநோக்கு பார்வை இருந்தது. இன்று அது யாரிடமும் இல்லை என்றார் வைகோ.


No comments:
Post a Comment