நடைபெற்ற அதிபர் தேர்தலில் உலகம் எதிர்பார்த்தபடி விளாடிமிர் புற்றின் அதிகப்படியான வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளார். நேற்றிரவு 60 வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட வேளை அவர் 63.42 வீதமான வாக்குகளை பெற்றிருந்தார். கிரெம்ளினுக்கு முன்னால் நின்று ஆனந்தக் கண்ணீர் மல்க பேசிய அவர் தான் சரியான முறையில் போட்டியிட்டு எதிரிகளை தோற்கடித்துள்ளதாக கூறினார்.ஆனால் தேர்தல் கண்காணிப்பிற்காக சென்றிருந்த குழுவினர் தமக்கு தெரிந்தளவிலேயே சுமார் 3000 இடங்களில் தேர்தல் மோசடிகள் நடந்துள்ளதாக தெரிவித்தார்கள். மேலும் டென்மார்க்கில் இருந்து தேர்தல் கண்காணிப்பு குழுவில் சென்ற வென்ஸ்ர கட்சி உறுப்பினர் கூறும்போது தான் ஒன்பது இடங்களுக்கு சென்றதாகவும், பல இடங்களில் செத்துப் போன தகப்பனின் வாக்கை போட்டதாகவும், செத்துப்போன நண்பனின் வாக்கை போட்டதாகவும் பலர் கூறியுள்ளனர். மேலும் சில இடங்களில் போலியான அடையாள அட்டை தயாரித்து வழங்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் வாக்குப் பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு, இரகசியமாக மாற்றி வைக்கப்பட்டன. பல இடங்களில் கண்காணிப்பாளர் வரக்கூடாதென விரட்டியடிக்கப்பட்டு காரியங்கள் நடந்துள்ளன. இப்படியாக செத்தவர்களின் வாக்குகளும் மோசடியும் புற்றினுக்கு அபார வெற்iறியக் கொடுத்துள்ளது.
கபடமான முறையில் மக்களை ஏமாற்றி நடந்துள்ள இந்தத் தேர்தலுக்கு எதிராக அணி திரளும்படி எதிரணி அறைகூவல் விடுத்துள்ளது. பிரமாண்டமான எதிர்ப்பு ஊர்வலத்திற்கு மொஸ்கோ தயாராகிக் கொண்டிருப்பதாக சற்று முன் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. இரண்டு பெரும் ஆர்பாட்ட பேரணிகள் நடைபெறவுள்ளன. சுமார் 12.000 கலகம் அடக்கும் போலீசார் தலைநகர் நோக்கி அழைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. சட்டத்திற்கு முரணாக நடப்பவர்கள் கடும் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று ஊதுகுழலான ராஸ் செய்தித் தாபனம் கூறுகிறது. இன்னமும் உத்தியோக பூர்வமான முடிவு வெளியிடப்படவில்லை. ஆனால் புற்றின் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அதேவேளை சிரியா பற்றி யாதொரு கருத்தையும் கூறாமலே புற்றின் இருந்துள்ளார். ஆர்பாட்ட ஊர்வலங்கள் எப்படி மேலை நாடுகளில் முதன்மைப் படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அவருடைய நகர்வு இருக்கும். வெற்றி மயக்கத்தில் இருக்கும் அவர் பாரிய ஆர்பாட்ட ஊர்வலங்கள் நடக்கப்போவதால் சிரியா பக்கம் சாய்வதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வாளர் கூறுகிறார்கள். மேலை நாடுகள் எடுத்த முடிவில் மாற்றமில்லாதிருப்பது கவனிக்கத்தக்கது. இதே நிலைப்பாடே ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையிலும் இருக்கும் என்று கருத இடமுள்ளது.
மேலும் இன்று சிரியாவின் மேற்குப் பகுதி தவிர்ந்த மற்றைய இடங்களில் இரு தரப்பிற்கும் கடுமையான மோதல்கள் ஆரம்பித்துள்ளன. தெற்கு சிரியாவில் உள்ள டீரா நகரம் பொறிகக்கி பறந்து கொண்டிருக்கிறது. ஜோர்டான் நாட்டின் எல்லைப் புறத்தில் இந்த மோதல் நடைபெறுகிறது.
சிரியாவில் போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவது தொடர்ந்தும் சிக்கலாகவே இருந்து வருகிறது. முன்னைய காலங்களுடன் ஒப்பிட்டால் இன்றுள்ள நிலை தொண்டு நிறுவனங்களுக்கு பலத்த சவாலாக மாறியுள்ளதாக டேனிஸ் தேவாலயப் பிரிவு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ஆளாளுக்கு ஆயுதங்களை தூக்கி போராளிகள் என்று கூறி சண்டையில் குதித்துள்ளார்கள். அவர்களுக்கு சர்வதேச போர் நியமங்கள் எதுவுமே தெரியாமல் துப்பாக்கிகளுடன் அலைவதால் தொண்டு நிறுவன ஊழியரின் உயிர்கள் ஊசலாடுகிறது என்றும் தெரிவித்தார்.
2001 பயங்கரவாத சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தொண்டு நிறுவனங்கள் குறித்த பார்வை வெகுவாக மாறிவிட்டது. ஊழியர்கள் நிராயுதபாணிகளாக சென்று வீணாக உயிர் கொடுக்க வேண்டியிருக்கிறது. சென்ற சனிக்கிழமையும் டேனிஸ் தேவாலய ஊழியர் ஒருவர் சிரியாவில் கொல்லப்பட்டது தெரிந்ததே. சென்ற மாதம் இரண்டு டேனிஸ் செஞ்சிலுவைச் சங்க ஊழியர் சோமாலியாவில் கடத்தப்பட்டார்கள். அதுபோல சிறீலங்காவில் 16 தொண்டு ஊழியர் கொன்று புதைக்கப்பட்டார்கள். இப்படி நிலமைகள் மோசமடைந்து வருகின்றன. இதுபோல பாலர் வகுப்பு மட்டும் படித்தவர்களை படைகளில் வைத்துள்ள ஆசிய நாடுகள் பல உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது.
மறுபுறம் நேற்று ஏமன் நாட்டில் இடம் பெற்ற தாக்குதலில் 100 ஏமன் படைகளை அல்குவைடா படைப்பிரிவு கொன்றொழித்துள்ளது. அல் குவைடா அதிக ஆதிக்கம் பெற்ற தென் பகுதியில் உள்ள காவல் கடவையொன்றில் இடம் பெற்ற தாக்குதலில் இந்த இரத்த ஆறு ஓடியிருக்கிறது.
எதிர்வரும் 24 ம் திகதி எகிப்து 100 பேரைக் கொண்ட புதிய குழுவை அமைத்து அந்த நாட்டுக்கான அரசியல் யாப்பை எழுத இருக்கிறது. இராணுவத்திடமிருந்து அரச அதிகாரத்தை முற்றாக எடுத்து மக்கள் கையில் ஒப்படைக்கும் சட்டரீதியான ஆவணமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த அவையில் இஸ்லாத்தால் உருவேற்றப்பட்டவர்கள் அதிகம் இருப்பதால் மோசமான சட்டங்கள், பெண்ணடிமை சாசனங்கள், ஸாரியார் தண்டனை சட்டங்கள் இடம் பெறலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இருந்தாலும் அந்த நாடு சர்வாதிகாரத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுபட ஆரம்பித்துள்ளதை மறுக்க இயலாது.
இத்தாலியில் தொடர்ந்து அரசுக்கெதிரான ஆர்பாட்டங்கள் சூடுபிடித்து வருகின்றன. புதிய பிரதமர் மரியோ மொன்ரியின் ஆட்சி ஒரு திருடனின் ஆட்சி என்று ஆர்பாட்டக்காரர் கோஷமெழுப்பியுள்ளனர். பெற்றோல் விலை நெருப்பாக எரிகிறது, வேலையில்லாத் திண்டாட்டம் 9.2 வீதமாக அதிகரித்துவிட்டது. இவ்வளவுக்கு பின்னரும் மக்களை சுரண்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் வயிற்றில் கொட்ட வந்த திருடனின் ஆட்சி வேண்டாம் என்று வீறு கொண்டுள்ளனர் ஆர்பாட்டக்காரர். சுமார் 20.000 பேர் இந்த ஆர்பாட்டங்களில் பங்கேற்றனர், தொடர்ந்து எரிகிறது நெருப்பு.
இதேபோல கொலன்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கியற்ஸ் வில்டர்சின் அறிக்கை வெளியாகியுள்ளது. தேவையற்ற முள் முடியான யூரோ நாணயத்தை தலையில் சுமந்திருப்பதால் ஒவ்வொரு கொலன்ட் மக்களும் வருடாந்தம் 2700 யூரோவை வீணாக இழந்து வருகிறார்கள். கொலன்ட் பொருளாதாரம் யூரா போன்ற பெறுமதி கூடிய நாணயத்தை தாங்கும் பாரிய பொருளதாரமல்ல. நாட்டுக்கு ஏற்ற நாணயம் வேண்டும் என்பதை கொலன்ட் அரசியல்வாதிகள் புரியவில்லை என்றும் அது கூறுகிறது. அஞ்சு காசுக்கு அப்பம் விற்கும் அன்னம்மாவுக்கு யூரோ நாணயத்தில் வியாபாரம் தேவையற்றது. அவளுக்கு சில்லறைக்காசே போதும் என்பது இதனுடைய கருத்தாகும்.
கிழக்கு போலந்தில் நேற்று முன்தினம் இரண்டு ரயில் வண்டிகள் ஒன்றோடு ஒன்று நெற்றி முட்ட மோதிச் சிதறிய கூத்தாட்டம் நடந்துள்ளது. எப்படி ஒரே தண்டவாளத்தில் எதிரெதிராக இரண்டு ரயில் வண்டிகள் வந்தன என்ற குழப்பம் இதுவரை தீர்ந்தபாடில்லை. 14 பேர் இறந்து 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 200 பேர் கொண்ட மீட்புக்குழு மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.
சதாம் உசேன் காலத்தில் தடை செய்யப்பட்ட ஈராக்கின் ஓயில் உற்பத்தி மறுபடியும் பழைய நிலைக்கு மின்னல் வேகத்தில் உயர்த்தப்படுகிறது. கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் தினசரி மூன்று மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தி செய்யப்படும் அதி உயர் நிலைக்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஈரானின் எண்ணெய் விற்பனைக்கு தடை போட்ட மேலை நாடுகள் இப்போது அந்த இடத்தில் ஈராக்கின் ஓயிலை திறந்துவிட்டுள்ளன. ஈரானையும் – ராக்கையும் மோத வைத்து மேலை நாடுகள் என்றுமே அழிவில்லாத நலத்தை சுகித்து வருவதற்கு இது அழகான உதாரணமாகும்.


No comments:
Post a Comment