கொழும்பில் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி நடைபெறவுள்ள பாரதியார் விழா இலங்கை அரசு ஏதோ உள்நோக்கத்துடன் தான் நடத்தப்படுகிறது என்றும் இந்த நிகழ்வில் பங்கெடுக்க வேண்டாம் என சென்னை பாரதி சங்க நிர்வாகிகளையும், பேராசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.’தேமதுரத் தமிழோசை உலகறியச் செய்வோம்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டு பிரமுகர்கள் இலங்கை செல்ல உள்ளனர்.
இந்நிலையில் கொழும்பில் நடைபெறும் விழாவில் தமிழக பிரமுகர்கள் பங்கேற்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுடனான போரின்போது அப்பாவி தமிழ் மக்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழ் கவிஞரான பாரதியாருக்கு விழா நடத்துவதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது எனவும் தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை செல்ல உள்ள தமிழக பிரமுகர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தமிழ் ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர்.
பாரதி இன்று இருந்திருந்தால், சிங்களவரைச் சபித்து அறம் பாடி இருப்பார்!-வைகோ!
பாரதி இன்று இருந்திருந்தால், சிங்களவர்களைச் சபித்து அறம் பாடி இருப்பார். எனவே, அவரது பெயரில் கொழும்பு நகரில் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டாம் என சென்னை பாரதி சங்க நிர்வாகிகளையும், பேராசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதி சங்கமும் இணைந்து, ஜுன் 1-ந்தேதியன்று கொழும்பில் பாரதி விழா நடத்துவதாகவும், தமிழகத்தில் இருந்து பேராசிரியர்களும், சொற்பொழிவாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிகிறேன்.
இதனுடைய கருப்பொருள், `தேமதுரத் தமிழ் ஓசை, உலகெலாம் பரவச் செய்வோம்' என்று அறிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு, தமிழ் ஈழமே ஒரு அடக்குமுறை சிறைக்கூடமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது. தமிழர்களின் ஊர்ப்பெயர்கள் அனைத்தையும் மாற்றி சிங்கள பெயர்களாக ஆக்கி விட்டனர்.
இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் அழிவதையே தடுக்க முடியாதவர்கள், உலகெங்கும் தமிழோசை பரப்பப்போவதாக கூறுவது உலகத்தை ஏமாற்ற சிங்கள அரசுக்கு துணைபோகும் செயலாகும்.
இனப்படுகொலைகளை மூடி மறைக்க, அங்கு அமைதி ஏற்பட்டுள்ளது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த சிங்கள அரசும், இந்திய அரசும் திட்டமிட்டுப் பல போலி நாடகங்களை நடத்தி வருகின்றன.
லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள அரசு ஈவிரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்தது. வெகுண்டெழுந்து சிங்களவரைக் கண்டனம் செய்ய வேண்டிய தமிழ்ச்சங்கம் உண்மையை மூடி மறைக்க, இப்படி நிகழ்ச்சி நடத்துவது மிகவும் வேதனை அளிக்கின்றது.
பாரதி இன்று இருந்திருந்தால், சிங்களரைச் சபித்து அறம் பாடி இருப்பார்.
எனவே, கொழும்பு நகரில் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிகழ்ச்சியில் பங்கெடுக்க வேண்டாம் என சென்னை பாரதி சங்க நிர்வாகிகளையும், பேராசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment