
பிரித்தானியாவிலிருந்து திருகோணமலைக்கு வந்த தமிழர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் வழி மறித்துத் ரி-56 ரகத் துப்பாக்கியால் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
திருமலையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இவர், தற்போது திருகோணமலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியவர் திருமலையில் பிரபல்ய வில்லா என்ற ஹோட்டல் உரிமையாளரான கந்தையா றாஐகோபால் (வயது-38) டொக்யாட் வீதி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகின்றது.
மூதூர், மல்லிகைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனவும் லண்டனில் தொழில் ரீதியாக குடும்பத்துடன் வசித்து வருபவரும், மூன்று பிள்ளைகளின் தந்தையும் ஆவார் எனவும், லண்டனிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்னரே திருகோணமலை வந்ததாகவும் தெரியவருகின்றது.
மரத்தடிப் பகுதியிலுள்ள தனக்குச் சொந்தமான எரிபொருள் நிலையத்திலிருந்து பிற்பகல் 8.30 மணியளவில் ஹோட்டலுக்குச் செல்வதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விகாரை வீதியில் வழி மறித்து துப்பாக்கியால் வலது பக்க நெஞ்சுப் பகுதியிலும், இரண்டு கால் பகுதியிலும் சுடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் திருகோணமலையில் போட்டியிட்ட எஸ்.கே.நடேசப்பிள்ளை என்பவரின் சகோதரரும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க வைத்தியசாலையில் இவருக்கான இரத்தம் வழங்குவதெற்தென இரத்த வங்கியின் முன் இளைஞர்கள் வரிசையில் காத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை நத்தார் தினத்தன்று பிரித்தானியப் பிரஜை ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் அவர் உயிரிழந்ததுடன், அவரின் மனைவி படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கடந்த 30 ஆண்டுகாலம் நிலவிய யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாக அரச தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளபோதும், ஆயுதக் கலாசாரம் இன்னும் ஓயாத நிலையில், அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுவதும், கடத்தப்படுவதும், காணாமல் போதலும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
எனவே அரசுடன் ஒட்டி நிற்பவர்களிடமே ஆயுதங்கள் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. ஏனெனில் விடுதலைப்புலிகளை அழித்து விட்டதா அறிவித்து விட்டு இனந்தெரியாதவர்கள் என்ற சொற்பதத்தைப் பயன்படுத்துவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாததொன்று.
அத்துடன் இனந்தெரியாதவர்களிடம் ஆயுதம் இருக்குமாயின் விடுதலைப்புலிகள் அழிக்கப்படவில்லை என்பதை அரசு எடுத்துக் கூறுவதாக அர்த்தப்படும்.
ஆகவே ஒன்று விடுதலைப்புலிகள் அழிக்கப்படவில்லை, அவ்வாறு இல்லையெனில் அரச ஒட்டுண்ணிகளிடமே ஆயுதம் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதேநேரம் ரி-56 ரகத் துப்பாக்கி மூலம் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமையிலிருந்து இது ஒரு பகிரங்கமானதும், பலம் மிக்கவர்களின் செயற்பாடு என்தையும் ஊகித்துக் கொள்ள முடியுகின்றது.


No comments:
Post a Comment