
பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு ராஜ்ஜியம்வரை தமிழீழ மக்களை நகர்த்தி வந்த தேசியத் தலைவர் அவர்களது காலத்துத் தமிழர்களை மீண்டும் பூஜ்ஜியத்தினுள் புதைக்கும் காரியத்தை சிங்கள அரசுடன் சேர்ந்து நம்மவர்களும் அரங்கேற்றத் துடிக்கின்றார்கள்.
'இனி முடியாது' என்பதை நிரூபிப்பதற்காக, சிங்கள தேசத்தின் கொடூரங்களை தோற்கடிக்கப்பட முடியாத பலமாகக் காட்ட முயற்சித்தார்கள்.
'வேறு வழியே இல்லை' என்பதை நிரூபிப்பதற்காக, அடங்காத ஈழத் தமிழர்கள் அடிமைத்தனத்திற்குள் தங்களைப் புதைக்கச் சம்மதித்துவிட்டார்கள் எனக் காட்ட முயற்சித்தார்கள்.
'நஞ்சை மாலையாக அணிந்து, களத்தில் சாதனை நிகழ்த்திய விடுதலைப் புலிகளை மீட்க' சரணடைதலே சாத்தியம் என்றார்கள்.
'புலம்பெயர் தமிழர்கள் போர்க் குற்ற விசாணைக்கான தமது கோரிக்கையினைக் கைவிட்டாலே' சிங்களத்திடம் இரப்பது சாத்தியம் என்றார்கள்.
'புலிக் கொடியையும், பிரபாகரனையும் மறந்து ருத்திரகுமாரனை புலம்பெயர் தமிழர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே' ஈழத் தமிழர்களை மீட்பது சாத்தியம் என்றார்கள்.
'இந்தியாவை அனுசரித்தால் மட்டுமே' ஈழத் தமிழன் உயிர் பிழைப்பது சாத்தியம் என்றார்கள்.
இத்தனை ஈனத் தமிழர்களது சாத்தியப் பட்டியலையும் தகர்த்து உலகப் பரப்பில் தமிழீழ மக்களின் அவலங்களை எடுத்துச் சென்றது சனல் 4 என்ற பிரித்தானியத் தொலைக்காட்சி.
தனது பாவத்தைக் கழுவ முயன்ற பான் கி மூன் அமைத்த ஆணைக்குழு அறிக்கை மூலம் சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்களைப் பட்டியலிட்டது.
உலக நாடுகளின் மனச்சாட்சியை விடுதலைப் புலிகளது மாவீரமும், ஈகமும் தட்டி எழுப்பியது. உயிரோடு ஈழக் களத்தில் போராடிய புலிகள், சாய்ந்து வீழ்ந்த பின்னரும் சிங்களக் கொடூரங்களை அம்பலப்படுத்தி உலகக் களத்தில் போராடுகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் கள்ளிச் செடிகள் பேசிய தத்துவங்கள் எல்லாம் காற்றில் கரைந்து போயின. உண்மையும், நேர்மையும், இலட்சிய உறுதியும், ஈகமும் உலகத் தமிழர்களை நேர் கோட்டிற்கு அழைத்து வந்துள்ளது.
ஸ்பெக்ரம் ஊழலிலிருந்து தன் மகளைக் காப்பாற்ற ஈழத் தமிழர்களை சோனியா காந்தியின் கோரப் பசிக்குக் காணிக்கையாக்கிய கருணாநிதியைத் தமிழகத்துத் தமிழர்கள் ஆட்சிக் கட்டிலிலிருந்து தூக்கி எறிந்தார்கள். காங்கிரஸ் கட்சியைத் துடைத்து எறிந்தார்கள்.
ஈழத் தமிழர்களுக்கான நீதி கோரும் போராட்டங்கள் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவல்ல... அது இன்னொரு போர்க் களத்தின் ஆரம்பம் என்பதை மகிந்தவின் மைத்துனருக்கு செருப்படி கொடுத்தே உணர வைத்தார்கள்.
இப்போது இன்னொரு போராட்டம் உலகத் தமிழர்களை உலுப்பி உறக்கம் கலைய வைத்துள்ளது.
சிங்களத்தின் உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தையும் தாய்த் தமிழகம் தொடக்கி வைத்துள்ளது. சிங்களத்துப் பொருட்களை கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவற்றை உடன் அகற்றுமாறும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 'இலங்கைப் பொருட்களைப் புறக்கணிப்போம்' என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சக்தி சரவணன் என்ற மூத்த அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
தமிழக அரசு ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இப்போது இலங்கை உற்பத்திப் பொருள்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரச கூட்டுறவுச் சங்கங்களே கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளன.
ஒன்றரைக் கோடி சிங்களவர்களிடமிருந்து ஈழத் தமிழர்களை மீட்க, பத்துக்கோடி தமிழர்களும் போராட ஆரம்பித்துவிட்டார்கள். முத்துக்குமாரன் மூட்டிய தீ, பற்றிப் படர்ந்து வருகின்றது. அது ஈழத் தமிழர்களை மீட்க்கும்வரை ஓயாது.
புலம்பெயர் தமிழினமே புறப்பட்டு வா, போர்க் களத்திற்கு! சிங்களத்தின் சுதந்திர நாளைக் கரி நாளாக்கவும், தமிழினத்தின் மீதான சிங்களத்தின் இனப் படுகொலை நாளாக்கவும் பெப்ரவரி 04 இல் ஒன்று திரண்டு போராடுவோம் எழுந்து வா! மார்ச் 05 இல் ஜெனிவா முருகதாசன் திடலில் பேரெழுச்சி பூண்டு ஐ.நா.விடம் ஈழத் தமிழர்களுக்கு நீதி கோருவோம் நிமிர்ந்து வா!
- கரிகாலன்


No comments:
Post a Comment