ஆப்கான் கந்தகார் பகுதியில் வீறு கொண்ட அமெரிக்கப் படையினன் ஒருவன் நடாத்திய வெறியாட்டத்தில் கந்தகார் பகுதியில் 16 அப்பாவிப் பொது மக்கள் கொன்று வீசப்பட்டது தெரிந்ததே. இந்த விவகாரம் தொடர்பாக ஆப்பான் அதிபர் ஹர்மீட் கார்சாயுடன் தொலைபேசி வழியாக உரையாடிய அமெரிக்க அதிபர் தமது வருத்தங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.இந்த நிகழ்வு குர்ரான் எரிப்புப் போராட்டத்தால் உருவேறியுள்ள ஆப்கானில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல நிலமைகளை மோசமாக்கியுள்ளது. ஆப்கான் பிணக்குழியாக மாறப்போகிறது என்று தலபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். உடனடியாக போதிய விளக்கம் தரவேண்டுமென ஆப்கான் அதிபர் கேட்டாலும், நிகழ்வை பொதுமைப்படுத்தி பார்க்க வேண்டாம் என்று அமெரிக்கா கேட்டுள்ளது. நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட படையினனின் செயல் அவன் கைதாகியுள்ளான் விசாரணைகள் தொடர்கின்றன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டில் இருந்து முடிவே இல்லாமல் தொடரும் போர் நேட்டோ படைகளுக்கு பலத்த நம்பிக்கை வரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையே அங்கிருந்து அடுத்தடுத்து வரும் அவல நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. மேலும் ஆப்கான் படைகளுக்கு பயிற்சி கொடுத்தாலும் அதனால் யாதொரு பயனும் கிடையாது என்பது தற்போது கள யதார்த்தமாக உள்ளது. ஆப்கான் படைகளை தனியே அனுப்பினால் கொள்ளை, கொலை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்யும் ஒழுக்கம் கெட்டவர்களாக உள்ளார்கள். இப்போது அவர்களை கண்காணித்தபடி நேட்டோ படைகள் போகிறது. ஆகவே ஆப்கானில் இருந்து இறுதிவரை வெற்றியுடன் வெளியேற முடியாது என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. நேட்டோ செயலர் ஆனஸ் போ ராஸ்முசனோ 2014 ல் ஆப்கானில் இருந்து நேட்டோ வெளியேறும் என்ற உறுதியை இனி தம்மால் தர முடியாது என்று சற்று முன்னர் கூறியுள்ளார்.
அதேநேரம் சிரியா சென்ற கொபி அனான் முன்னரே எதிர்பார்த்தபடி பேச்சுக்களில் வெற்றிபெற தவறியுள்ளார். நேற்று ஞாயிறு 26 சிறு பிள்ளைகளும் 21 பெண்களும் கோம்ஸ் நகரத்தில் கழுத்தறுத்தும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்கள் மீது பெற்றோல் ஊற்றி கொழுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 58 பேரை நேற்று மட்டும் கொன்று தள்ளியது ஆஸாட் படைகள். இவர்களில் 12 போராளிகளும் அடக்கம். சிரியா உலகப் பொருளாதாரத்தை மேலும் மோசமடைய செய்யப் போகிறது என்பது தெரிகிறது. சிரியாவுடன் போரை ஆரம்பித்தால் உலகப் பொருளாதாரம் மறுபடியும் ஒரு பாதாள வீழ்ச்சியை சந்திக்கும். இப்போது டபிள் டிப்பில் விழுந்துள்ள உலகப் பொருளாதாரம் றிபிள் டிப்பில் விழும்.
இதற்குள் பிரான்சில் அதிபர் தேர்தல்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளது. வரும் மே நடைபெறவுள்ள இறுதிச்சுற்றுக்கு முன்னோடியாக ஏப்ரல் முதற்கட்ட வாக்களிப்புக்கள் நடைபெறவுள்ளன. நேற்று புதன் தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய தற்போதைய அதிபர் ஸார்கோஸி யாருக்கு எச்சரிக்கைவிடுவதென தெரியாது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வரும் வகை தொகையற்ற அகதிகளை கட்டுப்படுத்தத் தவறினால் பிரான்சை ஐரோப்பிய ஒன்றிய செங்கன் உடன்படிக்கையில் இருந்து விலத்திவிடுவேன் என்று எச்சரித்தார். செங்கனில் இருந்து பிரான்சை வெளியேற்றினால் கடுமையாக கடவுச் சீட்டு பரிசோதனைகள் இடம் பெறும் அகதிகளை கட்டுப்படுத்தலாம் என்பது கருத்தாகும்.
இதுபோல டென்மார்க்கின் வெளிநாட்டவருக்கு எதிரான டேனிஸ் மக்கள் கட்சி எல்லைப் புறங்களை கண்காணிக்க வேண்டும் என்று கூறியபோது வெகுண்டெழுந்த ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து அங்கத்துவ நாடுகளுக்கும் கடுமையான எச்சரிக்கை கொடுத்து கடிதம் அனுப்பியிருந்தது. அதில் செங்கன் ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டுமெனவும் கேட்டிருந்தது. இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் கதாநாகனான ஸார்கோஸி செங்கனை உடைக்கப் போவதாக மிரட்டியிருப்பது கொலகொலத்துக் கிடக்கும் ஐரோப்பிய ஒன்றிய கோட்டையை தகர்க்கும் ஒரு வேலையாகவே அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தவறாக ஊழல் செய்து தேர்தலில் வென்றதாகக் கூறப்படும் புற்றினை வாழ்த்திய ஸார்கோஸி இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தை சாடியுள்ளார். யார் நண்பன் யார் பகைவன் என்று தெரியாத குழப்பத்தில் தடுமாறுகிறார் ஸார்கோஸி.
பழைய பிரான்சிய அதிபர் ஜாக் ஸிராக் பாணியில் அகதிகள் வெளிநாட்டவரை வெறுத்து, இன வெறுப்பு வாத அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த ஸார்கோஸி மறுபடியும் அதே பாணியைக் கடுமையாக்கி தேர்தல் களம் புகுந்துள்ளார். ஆனால் இவர் சுமார் இரண்டு வீத வாக்குகளால் தோல்வியடைவார் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. பிரான்சின் பொருளாதார பின்னடைவை இவருடைய வலதுசாரி இன, நிற வெறுப்புக் கருத்துக்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது தெரிந்ததே.
அலைகள்


No comments:
Post a Comment