
ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வுகளை அறிக்கையிடுவதற்கு மகிந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஜெனீவா அனுப்பிவைக்கப்பட்ட ஊடக பிரதானிகள் குட்டையைக் குழப்பிக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை உள்நாட்டில் மகிந்த அரசிற்கான ஆதரவை அதிகரிக்கும் வகையில் பிரசாரத்தை மேற்கொள்வதற்காகவே இந்த ஊடகவியலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும், இவர்களது பணியை உரிய முறையில் செய்யவில்லையென மகிந்த ராஜபக்ஷ ஆத்திரமடைந்துள்ளார்.
சிறீலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர, லக்பிம பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க ஆகிய இரண்டு சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், ஜெனீவாவில் விலைமாதர் விடுதிக்குச் சென்றமை அம்பலமாகியது.
இவர்கள் விலைமாதர் விடுதிக்குச் சென்று தமது கடவுச் சீட்டையும் தொலைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் தற்காலிக கடவுச் சீட்டின் மூலமே இலங்கை செல்ல நேரிட்டுள்ளது. இந்த விடயங்களை சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நேஷன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மாலிந்த செனவிரத்னவிடம் கூறியுள்ளார்.
ஜெனீவாவிலிருந்து எவ்வாறான ஊடக பிரசாரத்தை மேற்கொள்வதற்கு மாலிந்தவை அனுப்பிவைக்கத் தீர்மானித்த மகிந்த ராஜபக்ஷ, அவரை அழைத்து விளக்கமளிக்கும்போதே மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment