
இலங்கையில் உள்ள ஈழத் தமிழினம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசாங்கத்தினால் இன ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுச் சொல்லொணத் துன்பங்களை அனுபவித்து வருவதுடன், என்றுமில்லாதவாறு மிகப் பெரும் இராணுவ அடக்கு முறைக்குள் சிக்கி தவி்த்துக் கொண்டிருக்கின்றது.
இனஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடிய தமிழீழ மக்கள், 2009 இல் தமிழரின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீலங்காச் சிறைகளில் அம்மக்கள் வகைதொகையின்றி அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது உலகம் அறிந்த விடயம்.
தமிழ் இளைஞர் யுவதிகளை எந்தவித குற்றப் பத்திரங்களையும் நீதிமன்றத்திற்குத் தாக்கல் செய்யாமலும், அதேநேரம் புனர்வாழ்வோ அல்லது இயல்பு வாழ்வுக்கு அவர்களைத் திரும்ப விடாமலும் உலகசட்ட விதிகளையோ, மனித உரிமைகளையோ மதிக்காது அவர்களை சிறைகளிலும் இரகசிய வதைக்கூடங்களிலும் அடைத்து சித்திரவதைப்படுத்தப்பட்டு வருகின்றமையும், இனஅழிப்பிற்கான செயல்வடிவமாகவே பார்க்கப்படுகிறது.
அதேவேளை தமிழ்ப் பெண்கள் மீதான அடக்குமுறை மூலம் தமிழ்ப் பண்பாட்டை சீரழித்து ஈழத்தமிழரின் மதிப்பினை குழிதோண்டிப் புதைத்துள்ளது. ஒரு இனத்தினுடைய பண்பாட்டை அழிப்பதுவும் இனஒடுக்கலின் ஒரு பகுதியே ஆகும்.
இத்தகைய ஒரு சூழலில் கடந்த மூன்று வருடங்களாக அரசியல் கைதிகள் என்ற போர்வையில் எந்தவித வெளித்தொடர்பும் அற்று சர்வதேச சட்டங்களையும் மீறி அடைக்கபட்டிருக்கும் நிலையில், தமது விடுதலையை வேண்டி கடந்த மே 17 முதல் சிங்களத்தின் சிறைச்சாலைகளில் உள்ள எம்முறவுகள் தமக்கு விடுதலை கோரி உண்ணவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருக்கிறார்கள்.
எம்முறவுகளின் இவ்வுண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று வவுனியாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாரளுமன்ற உறுப்பினர்கள் அடையாள உண்ணவிரதப் போராட்டத்தினை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
சிறைகளில் வாடும் எம்முறவுகளுகளின் விடுதலைக்கான முயற்சியை மேற்கொள்வது ஒவ்வொரு ஈழத்தமிழரினதும் தார்மீகக் கடமையாகும். எனவே நாளை நடக்கவிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அடையாள உண்ணவிரதப் போராட்டத்திற்கு தாயகமக்கள் நேரடியாகப் பங்களிக்கவேண்டும் என்று பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினராகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேவேளை புலம்பெயர்ந்து வாழும் உலகத்தமிழினம் அவர்களுக்கு ஒத்தாசை வழங்கி சர்வதேசக்கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலான கவனயீர்ப்புப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.
எனவே சிறீலங்காவில் இயங்கிக்கொண்டிருக்கும் மனித உரிமை அமைப்புக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புக்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஊடாக இவ்விடையத்தை வெளிக்கொணர்ந்து, அவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினராகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
எமக்கான நீதியையும்இ விடுதலையையும் பெறும் வரை ஓயாது குரல் கொடுப்போம். அடக்குமுறைக்குள் இருந்து விடுதலை பெற்று சுதந்திர மனிதர்களாக வாழ்வதற்கு உறுதியுடன் தொடர்ந்து போராடுவோமாக.


No comments:
Post a Comment