
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 2000 தமிழர்களை சுவிற்சர்லாந்து அரசாங்கம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பத் தீர்மானித்துள்ளதாக சுவிஸ் குடிவரவு குடியகல்வு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவையடுத்து பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்ற கூட்டம் ஒன்று பேர்னில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட்டப்பட்டு, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அகதிகளுக்கான ஐ.நா உயர்ஆணையர் அதிகாரிகள், புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக அமைப்பின் பிரதிநிதிகள், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள், சுவிஸ் குடிவரவு , குடியகல்வு பணியகத்தின் அகதிகள் விவகார அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சிறிலங்கா தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை நாடுகடத்தும சுவிஸ் அரசின் முடிவு குறித்து சுவிஸ் அதிகாரிகள் இங்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.
மாதம் ஒன்றுக்கு 100 சிறிலங்கர்கள் சுவிசில் புகலிடம் கோருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் தமது கோரிக்கைக்கு வலுவான காரணங்களை காட்டுவதில்லை என்றும் சுவிஸ் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கூறியுள்ளனர்.
சிறிலங்காவுக்கு தமிழர்களை திருப்பி அனுப்பும் முடிவுக்கு எதிராக அனைத்துலக அகதிகள் நாளன்று சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக சில நாட்களுக்கு முன்னர் போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே 1952ம் ஆண்டு இரண்டாவது உலகப் போரை அடுத்து சவிஸ் அரசாங்கம் கொண்டு வந்த குடிவரவு குடியகல்வு நடைமுறைகளைப் புதுப்பிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
,


No comments:
Post a Comment